புதுடெல்லி, மார்ச். 21-
லிபியா மீது அமெரிக்கா தலைமையிலான கூட்டு படையினர் நடத்திய தாக்குதலுக்கு, இந்தியா கண்டனம் தெரிவித்து உள்ளது.
ஐ.நா. சபை தீர்மானத்தின்படி, லிபியா நாட்டின் மீது அமெரிக்கா தலைமையிலான கூட்டு ராணுவ படையினர் விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலுக்கு இந்திய அரசு வருத்தமும், கண்டனமும் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக, இந்திய வெளியுறவு துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
லிபியாவில் வன்முறை தொடருவதற்கும், மனிதாபிமான சூழ்நிலை சீர்குலைந்துவருவதற்கும் ஆழ்ந்த கவலையை தெரிவித்துக் கொள்கிறது. அங்கு நடைபெற்றுவரும் விமான தாக்குதல் கண்டனத்துக்கு உரியது. ஏற்கனவே கடினமான சூழ்நிலையை சந்தித்து வரும் அந்த நாட்டு மக்களை காப்பாற்றுவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை, நிலைமையை மட்டுப்படுத்துவதாக இருக்க வேண்டுமே தவிர, அதிகரிப்பதாக இருக்கக்கூடாது.
விமான தாக்குதல், அங்குள்ள அப்பாவி பொது மக்கள், வெளிநாட்டுக்காரர்கள் மற்றும் தூதரக பணியாளர்களுக்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று இந்தியா நம்புகிறது. திரிபோலியில் உள்ள இந்திய தூதர் மணிமேகலையிடம், வெளியுறவு துறை செயலாளர் நிருபமா ராவ் தொடர்பு கொண்டு பேசினார். சனிக்கிழமை இரவில் `ஜெட்' போர் விமானங்கள் வானில் பறந்து சென்ற நிலையிலும் இந்திய தூதர் எந்தவித பதற்றமும் இன்றி அமைதியாக காணப்பட்டார்.
படைபலத்தை பயன்படுத்துவதை கைவிட்டு, அமைதியான வழிமுறைகளிலும், பேச்சுவார்த்தை மூலமாகவும் கருத்து வேறுபாடுகளை தீர்த்துக்கொள்ள முன்வர வேண்டும் என்று, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் வேண்டுகிறோம். இந்த பிரச்சினையில் ஐ.நா. சபை மற்றும் பிராந்திய அமைப்புகள் முக்கிய பங்காற்ற வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக