ஞாயிறு, மார்ச் 30, 2014

சதானந்தகவுடா மீது கிரிமினல் வழக்கு தொடருவேன் : சித்தராமையா பரபரப்பு பேட்டி

சதானந்தகவுடா மீது கிரிமினல் வழக்கு தொடருவேன் என்று முதல்–மந்திரி சித்தராமையா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மைசூரில் சித்தராமையா
முதல்–மந்திரி சித்தராமையா மைசூர் ராமகிருஷ்ணா நகரில் உள்ள தனது வீட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், ‘‘முன்னாள் முதல்–மந்திரி சதானந்தகவுடா ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, ‘பெங்களூர் மாநகராட்சி வளர்ச்சி நிதியில் நீங்கள் முறைகேடு செய்ததாக’ குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து உங்கள் பதில் என்ன?’’ என்று நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு பதில் அளித்து சித்தராமையா கூறியதாவது:–
பா.ஜனதாவினரின் கொள்கை
ஒரே பொய்யை 100 தடவை திரும்ப திரும்ப சொன்னால் அது உண்மையாகி விடும் என்பது பா.ஜனதா தலைவர்களின் கொள்கையாக இருந்து வருகிறது. அதன்படி தான் சதானந்தகவுடா எனக்கு எதிராக ஒரே பொய்யை பலமுறை சொல்லி வருகிறார்.
அவர் எதை பொய் என்று சொல்கிறார். எடியூரப்பா சிறைக்கு சென்றது பொய்யா, ஈசுவரப்பா வீட்டில் பணம் எண்ணும் எந்திரம் இருந்தது பொய்யா, ஜனார்த்தன ரெட்டி சிறையில் இருந்து வருகிறார், அது பொய்யா, ஊழல் புகாரில் சிக்கி பா.ஜனதா மந்திரிகள் 13 பேர் பதவி இழந்தார்களே அது பொய்யா?
அவசியம் இல்லை
நான் எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை. அதற்கு அவசியமும் இல்லை. அந்த கதி எனக்கு வரவில்லை. நான் யாரிடமும் ஒரு பைசா கூட வாங்கவில்லை. எனவே சதானந்தகவுடா கூறுவது முற்றிலும் பொய்யான தகவலாகும்.
சதானந்தகவுடா உண்மை தெரியாமல் பேசுகிறார். நான் ஆட்சி பொறுப்பை ஏற்றதில் இருந்தே சதானந்தகவுடா எனக்கு எதிராக ஏதாவது பொய் தகவல்களை தொடர்ந்து கூறி வருகிறார். அவர் ‘சித்து–சுள்ளு’ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறார். அதில் உள்ள தகவல்கள் அனைத்தும் பொய்யானவை. இந்த உண்மை விரைவில் தெரியவரும்.
கிரிமினல் வழக்கு
எனக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுவதை சதானந்தா கவுடா இத்துடன் நிறுத்திக் கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் சதானந்தகவுடாவுக்கு எதிராக கிரிமினல் வழக்கு தொடரப்படும். என்னைப் பற்றியோ அல்லது நான் சார்ந்துள்ள காங்கிரஸ் கட்சி பற்றியோ கேலி பேசுவது, பொய்யான தகவல்களை தெரிவிப்பது போன்ற இழி செயலில் ஈடுபடும் உரிமை யாருக்கும் இல்லை.
யார் உண்மை பேசுகிறார்கள், யார் பொய் சொல்கிறார்கள் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். பொய் சொல்பவர்களுக்கு தேர்தலின்போது மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக