ஞாயிறு, மார்ச் 30, 2014

வழக்கறிஞர் மஹ்மூத் ப்ராச்சாவுக்கு மிரட்டல்: பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்!

உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் மஹ்மூத் ப்ராச்சாவை மிரட்டி பணியவைக்க நடக்கும் முயற்சிகளுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும் அவரது உயிருக்கு பாதுகாப்பு வழங்கவும் கோரிக்கைவிடுத்துள்ளது. வழக்கறிஞர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் முயற்சிகள் அதிகரித்து வரும் வேளையில் அதிகாரிகள் கண்ணை மூடிக்கொண்டு இருப்பதாக தேசிய செயற்குழு குற்றம் சாட்டியது.இது நமது நீதித்துறை நடைமுறையின் பொருள் குறித்து கேள்வியை எழுப்புகிறது.
 இதனை ஒரு அடையாளமற்ற சம்பவமாக தனிமைப்படுத்தி பார்க்க முடியாது. தங்களது கடமையை நேர்மையாக நிறைவேற்றும் துணிச்சல்மிக்க வழக்கறிஞர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளர் மேலும் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர். அப்பாவிகள் மீது போலீஸ் புனைந்த கதைகளை குறித்து கேள்வி எழுப்பி அவர்களுக்காக வாதாடிய வழக்கறிஞர்கள் ஷாஹித் ஆஸ்மி மற்றும் காஸிம்ஜி ஆகியோர் கொலைச் செய்யப்பட்டுள்ளனர். 
இவை தங்களது அரசியல் சாசன கடமையை நிறைவேற்றும் வழக்கறிஞர்களை மிரட்டும் புதிய மனப்பாங்கிற்கு உதாரணங்களாகும். ஜாமீன் இல்லாமல் புனையப்பட்ட வழக்குகளில் சிக்கவைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவிகளுக்காக வாதாடி வருபவர் வழக்கறிஞர் மஹ்மூத் ப்ராச்சா. இவருடைய முயற்சியால் பலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இது நமது நாட்டில் நடந்து வரும் தீவிரவாத வேட்டைகளின் நம்பகத்தன்மையைக் குறித்து கேள்வியை எழுப்புகிறது. இயல்பாகவே இம்மாதிரியான வழக்குகளை புனைபவர்களும், அப்பாவி இளைஞர்களை வேட்டையாடுபவர்களும் தேசிய பாதுகாப்பின் பெயரால் தூண்டப்படுகின்றார்கள்.
இத்தகைய சம்பவங்களை அனுமதித்தால், வழக்கறிஞர்களின் தொழில்சார்ந்த நம்பிக்கை சீர்குலைவதோடு, ஆயிரக்கணக்கான அப்பாவிகள் சிறையில் இருந்து வெளியே வருவதற்கான ஒரே நம்பிக்கைக்கும் ஆபத்தாக முடிந்துவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக