வியாழன், அக்டோபர் 04, 2012

ஆட்டம் காணும் மத்திய அரசு – ஆதரவை விலக்கிக் கொண்டது ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா !

டெல்லி:சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டிற்கு அனுமதி, டீசல் விலை ஏற்றம், சமையல் எரிவாயு சிலிண்டர் மானியக் கட்டுப்பாடு ஆகியவற்றை வாபஸ்பெற  மத்திய அரசு மறுத்ததால் ஆதரவை விலக்கிய திரிணாமுல் காங்கிரசைப் போன்று  ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சாவும் தனது ஆதரவை வாபஸ்பெறுவதாக அறிவித்துள்ளது. இதனால் மத்திய அரசின் நிலைமை மோசமாகி வருகிறது. சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்ததால் திரிணாமுல் காங்கிரஸ்  தமது 19
எம்.பிக்களின் ஆதரவை விலக்கிக் கொண்டது.  இதேபோல் ஜார்க்கண்ட் விகாஸ்  மோர்ச்சாவும் அறிவித்துள்ளது. இக்கட்சிக்கு 2 எம்.பிக்கள் உள்ளனர். திரிணாமுல்  காங்கிரஸ் ஆதரவை விலக்கிய போதே மன்மோகன்சிங் அரசு சிறுபான்மை அரசாகிவிட்டது.  தொடர்ந்தும் ஒவ்வொரு கட்சிகளும் ஆதரவை விலக்கிக் கொண்டு வருவதால் காங்கிரஸ் அரசு  நீண்டகாலம் தாக்குப் பிடிக்காது என்றே கூறப்படுகிறது.
மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்போவதாக மமதா  மிரட்டி வருகிறது. கூட்டணியில் இருக்கும் திமுகவோ, சில்லரை வர்த்தகத்தில் அன்னிய  முதலீட்டுக்கு ஆதரவு என்பதற்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்தால் ஆதரிப்போம்
என்கிறது.
ஆனாலும் காங்கிரஸ் கட்சியோ தங்களுக்கு முழு பெரும்பான்மை இருப்பதாகவே  சொல்லுகிறது. காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மனிஷ் திவாரி கூறுகையில்,  சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதால் வேலை வாய்ப்பு எண்ணிக்கையே  அதிகரிக்கும். மத்திய அரசு முழு பெரும்பான்மையுடன் இருக்கிறது. அரசு திடமான  முடிவுகளை எடுக்கும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக