திங்கள், அக்டோபர் 08, 2012

இன்று கடல்வழி முற்றுகைப் போராட்டம்- மீண்டும் கூடங்குளத்தில் பதற்றம்

கூடங்குளம்: கூடங்குளம் அணுமின் நிலையத்தை கடல்வழியே இன்று முற்றுகையிடப் போவதாக போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக கடந்த ஓராண்டுகாலமாக தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் கூடங்குளம் அணு உலையில் யுரேனியம் நிரப்பும்
பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.இந்தப் போராட்டத்தின் ஒருபகுதியாக இன்று கடல்வழியே முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே கடந்த செப்டம்பர் 10-ந் தேதியன்றும் கடல்வழியே முற்றுகைப் போராட்டம் நடத்த முயன்ற போது பெரும் வன்முறையில் முடிந்தது. இதேபோல் கடந்த 22-ந் தேதியும் கடல்வழி முற்றுகைப் போராட்டம் நடத்த முயற்சித்தனர். இதைத் தொடர்ந்து இன்றும் தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களும் இணைந்து கொள்கின்றனர்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பின்புறத்தில் நடைபெற உள்ள இன்றைய முற்றுகைப் போராட்டத்தால் அப்பகுதியில் கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தின் போது பெண்கள், குழந்தைகள் ஆகியோர் கடற்கரையில் மனித சங்கிலியாக இணைந்து நிற்க முடிவு செய்துள்ளனர்.
அணுமின் நிலைய முற்றுகை போராட்டத்தாலும், போலீசார் குவிக்கப்பட்டதாலும் கூடங்குளம் பகுதியில் மீண்டும் பதற்றம் நிலவுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக