தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டிருக்கின்ற இழிவை எடுத்துக்காட்ட தாம் இன்று கருப்புச் சட்டை அணிந்ததாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்தார். திமுக தலைவர் கருணாநிதி இன்று கருப்புச் சட்டை அணிந்து அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது"நாளைய தினம்தானே போராட்டம் அறிவித்திருந்தீர்கள்...இன்று ஏன் கருப்பு சட்டை அணிந்து வந்திருக்கிறீர்கள்?” என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த கருணாநிதி,"தமிழ்நாட்டிற்கு சில மாதங்களாக ஏற்பட்டிருக்கின்ற
இழிவை எடுத்துக்காட்டவும், அந்த இழிவைப் போக்குவதற்கு எடுக்கின்ற முயற்சிகளுக்கு கருப்புச் சட்டங்களைக் கொண்டு இன்றைய ஆட்சியாளர்கள் அதை அடக்க முனைவதைக் கண்டிப்பதற்கு இந்தக் கருப்புச் சட்டையை இன்றைக்கே அணிந்திருக்கிறேன். நாளை தான் கழகத்தின் தொண்டர்கள், தோழர்கள், உடன்பிறப்புகள் அனைவரும் அணிய வேண்டும் என்று தான் முடிவெடுத்தோம். ஆனால் வேண்டுமென்றே காவல் துறையின் மூலமாக பல பகுதிகளில் இதற்குத் தடை விதிக்கப்பட்டு விட்டது.
தடை விதிக்கப்பட்டு விட்ட காரணத்தால், அதை அணிவகுத்துச் சென்று மீறுவதால் எதுவும் அசம்பாவிதங்கள், வன்முறைகள், விரும்பத்தகாத காரியங்கள் ஏற்பட்டு, பொது மக்களுக்கு சோதனை உருவாகக் கூடாது என்ற எண்ணத்தினால், நாளைக்கு அணிவகுப்பாக இருந்து இதை நடத்துவதை விட இன்று முதலே திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் கருப்புச் சட்டை அணிந்தால் என்ன என்று எனக்குத் தோன்றியது.அதன் அடையாளமாகத் தான் இன்றைக்கு கருப்புச் சட்டை அணிந்திருக்கிறேன்” என்றார்.
மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், " நாளை ஆயிரம் விளக்குத் தொகுதியிலே நான் துண்டறிக்கை வெளியிடவிருக்கிறேன். வில்லிவாக்கத்தில் பொதுச் செயலாளர் பேராசிரியர் துண்டறிக்கைகளை விநியோகிப்பார். கொளத்தூல் பொருளாளர் மு.க.ஸ்டாலின் துண்டறிக்கைகளை விநியோகிப்பார். நாளைய தினம் அவரவர்களும், அவரவர்களுக்குரிய எல்லைகளை வகுத்துக் கொண்டு இந்தப் பிரசுரங்களை விநியோகிப்பார்கள்.
அந்தப் பிரசுரங்களில் எந்தவிதமான சட்ட விரோதமான வார்த்தைகளும், அல்லது அநாகரிகமான வார்த்தைகளும் இடம் பெறாது. இடம் பெறக் கூடாது என்பது தலைமைக்கழகத்தின் ஆணை”என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக