அதிபர் வேட்பாளர்களுக்கான நேரடி விவாதத்தில், ஒபாமாவை விட, மிட் ரோம்னியின் வாதத்திறமை வாக்காளர்களை அதிகம் ஈர்த்துள்ளது கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளர்களாகப் போட்டியிடுபவர்கள் ஒரே மேடையில் நேரடி விவாதத்தில் ஈடுபடுவது 1960ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையில் உள்ளது. ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமா, குடியரசுக் கட்சி வேட்பாளர் மிட் ரோம்னி ஆகியோர் புதன்கிழமை
டென்வரில் நடைபெற்ற நேரடி விவாதத்தில் பங்கேற்றனர்.
விவாதத்தை, பி.பி.எஸ் செய்தி சேனலின் ஜிம் லேரர் ஒருங்கிணைத்தார். பொருளாதாரம், வரிவிதிப்பு, வேலைவாய்ப்பு, சுகாதாரம் உள்ளிட்ட உள்நாட்டுப் பிரச்னைகளில் தங்களது கொள்கைகள் குறித்து வேட்பாளர்கள் இருவரும் விவாதித்தனர்.
90 நிமிஷங்கள் நீடித்த இந்த விவாதத்தில் ரோம்னி, ஒபாமைவிட திறமையாகச் செயல்பட்டார்.
நலிந்த பொருளாதாரம், 8.1 சதவீதமாக நீடிக்கும் வேலைவாய்ப்பின்மை ஆகியவை குறித்து ரோம்னி விரிவாகப் பேசினார். விவாதத்துக்குப் பின், சிஎன்என்/ஓஆர்சி தொலைக்காட்சி மேற்கொண்ட கருத்துக்கணிப்பில், 65 வாக்காளர்கள் மிட் ரோம்னி விவாதத்தில் சிறப்பாகச் செயல்பட்டதாகக் கூறி அவருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். 25 சதவீதத்தினரே ஒபாமாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதனால், மிட் ரோம்னி தரப்பினர் உற்சாகமடைந்துள்ளனர். நாடு முழுவதும் பரவலாக எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு முடிவுகளில், இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
தி நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட அமெரிக்கா நாளிதழ்கள், இந்த விவாதத்தில் ஒபாமைவிட ரோம்னி மிகச்சிறப்பாகச் செயல்பட்டார்; ஒபாமாவை ரோம்னி நொறுக்கி விட்டார் என்று விமர்சித்துள்ளன.
2ஆவது நேரடி விவாதம் அக்டோபர் 16ஆம் தேதி நியூயார்க்கில் நடைபெறவுள்ளது. முன்னதாக, துணை அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் அக்டோபர் 11ஆம் தேதி கென்டகி நகரில் நேரடி விவாதத்தில் ஈடுபடவுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக