செவ்வாய், அக்டோபர் 02, 2012

மீண்டும் இஸ்ரேலுக்கு எதிராக குந்தர்க்ராஸ் !

டெல் அவீவ்:இஸ்ரேலின் அணுஆயுதங்கள் குறித்து நோபல் பரிசு பெற்ற ஜெர்மனி கவிஞர் குந்தர் க்ராஸ் மீண்டும் தனது கவிதையில் சாடியுள்ளார். இவ்வாண்டின் துவக்கத்தில் குந்தர்க்ராஸ் எழுதிய இஸ்ரேலுக்கு எதிரான கவிதை சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள  ‘வன் ஹிட் வண்டேர்ஸ்’ என்ற புதிய கவிதை தொகுப்பில் மீண்டும் இஸ்ரேலின் அணுஆயுத திட்டங்கள் குறித்து விமர்சித்துள்ளார். குந்தர் க்ராஸ் தனது கவிதையில் இஸ்ரேலின் அணு
ஆயுத ரகசியங்களை பிரிட்டனின் பிரபல பத்திரிகைக்கு கசியச் செய்த பிரபல அணு விஞ்ஞானி Mordechai Vanunu வின் நினைவுகள் ஊடே சஞ்சரிக்கிறார். கவிதையின் ஓரிடத்தில் Mordechai Vanunu ஐ உத்தமப் புருஷர்(paragon)என வர்ணிக்கிறார்.
அணு ஆயுத ரகசியங்களை கசியவிட்டதற்காக Mordechai Vanunuஐ இஸ்ரேல் 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது. 1986-ஆம் ஆண்டு Mordechai Vanunu கைது செய்யப்பட்டார். 18 ஆண்டுகளில் 11 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையாகும். 2004-ஆம் ஆண்டு அவர் தண்டனை முடிந்து வெளியே வந்த பிறகும் மீண்டும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி இஸ்ரேலிய அரசு பல தடவை அவரை சிறையில் அடைத்தது.
கடந்த ஏப்ரல் மாதம் குந்தர்க்ராஸ்  ‘வாட் மஸ்ட் பி ஸெட்’ என்ற கவிதையில் இஸ்ரேலின் அணு ஆயுதங்கள் குறித்த அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் இரட்டை வேடத்தை விமர்சித்திருந்தார். ‘இஸ்ரேல் அணுசக்தி நாடாக மாறுவது, உலக அமைதிக்கு அச்சுறுத்தல். இதற்கு எதிராக குரல் எழுப்பவேண்டிய காலம் நெருங்கிவிட்டது’ என்று குந்தர்க்ராஸ் எழுதியுள்ளார்.
ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் எழுப்பும் மிரட்டல்களின் எதிர்விளைவுகள் குறித்தும் குந்தர்க்ராஸ் தனது கவிதையில் பகிர்ந்து கொள்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக