சனி, அக்டோபர் 06, 2012

'அந்த' அன்னிய முதலீட்டுக்கு மட்டும் தான் எதிர்ப்பு.. 'இதுக்கு' இல்லை: கண்ணாமூச்சி ஆடும் பாஜக !

டெல்லி: நாட்டில் நேரடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதி கொடுக்கக் கூடாது என்பதுதான் பொதுவாக எதிர்க்கட்சிகளின் கோரிக்கை. ஆனால் பிரதான எதிர்க்கட்சியோ அன்னிய முதலீட்டு எதிர்ப்பிலும் "கூறு போட்டு வகை" பிரித்து வைத்திருப்பது அரசியலில் பெருங்கூத்துதான்! சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்த விவகாரத்தால் மன்மோகன்சிங், சிறுபான்மை அரசின் பிரதமராக
சுருங்கிப் போனார். ஆளும் மத்திய அரசிலிருந்து திரிணாமுல் காங்கிரஸ் எனும் சக்கரம் கழன்று கொள்ள , சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் என்கிற "தாங்கிகள்" துணையோடு ஆட்சி சக்கரம் ஓடிக் கொண்டிருக்கிறது. இன்னொரு பிரதான சக்கரமாக இருக்கும் திமுகவும்கூட எப்போது வேண்டுமானாலும் கழன்று கொள்ளலாம் என்ற நிலையில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது.
கூட்டணிக் கட்சிகளே இப்படியென்றால் எதிர்க்கட்சிகளை சொல்ல வேண்டுமா என்ன? டெல்லியையே குலுங்க வைக்கும் வகையில் ஒரே நாளில் பாஜக, இடதுசாரிகள், சமாஜ்வாதி கட்சி ஆகியவை பெரும் ஆராவாரத்துடன் ஆர்ப்பாட்டத்தை நடத்தி தங்களது "கடும்" எதிர்ப்பை வெளிப்படுத்தின.
இப்பொழுது மீண்டும் காப்பீடு மற்றும் ஓய்வூதியத் துறையில் நேரடி அன்னிய முதலீட்டுக்கு மத்திய அரசுக்கு அனுமதி கொடுத்திருக்கிறது மத்திய அரசு! இன்னும் எத்தனை துறைகளை திறந்துவிடப் போகிறதோ தெரியவில்லை! ஆனால் குய்யோ முறையோ என கூப்பாடு போட்ட எதிர்க்கட்சிகள் வாய்மூடி மவுனிகளாகிவிட்டன.
குறிப்பாக பாரதிய ஜனதா கட்சியோ அந்தர் பல்டி அடித்திருக்கிறது! அதாவது சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதியை எதிர்க்கும் நாங்கள் காப்பீடு மற்றும் ஓய்வூதியத் துறையில் அன்னிய முதலீட்டுக்கான அனுமதியை எதிர்க்க மாட்டோம் என்கிறார்கள்!
ஏன் இப்படி ஒரு விதிவிலக்கு! வேறொன்றும் பெரிதான காரணம் இல்லை! இவை இரண்டுமே முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சிக் காலத்தில் திட்டம் தீட்டப்பட்டவைதானாம்! அரசின் பங்குகளை விலக்கிக் கொள்வதற்கென்றே துறையை வைத்திருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நிதி அமைச்சராக இருந்த யஷ்வந்த்சின்ஹாவின் யோசனைதான் இரண்டுமாம்! இதனால் இதனை எதிர்க்கமாட்டோம் என்கின்றனர் பாஜகவினர்!
அன்னிய முதலீட்டுக்கான அனுமதியே கூடாது என்பதில் கூட ஒரு கொள்கை நியாயம் இருக்கிறது! நாங்க கொண்டுவந்ததால அனுமதிச்சுக்குங்க... நீங்க கொண்டுவந்ததால எதிர்க்கிறோம் என்கிற பாஜகவின் "கொள்கை" நியாயம் பாமரனுக்கு எங்கு புரியும்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக