செவ்வாய், அக்டோபர் 02, 2012

தெலுங்கானா:வன்முறைக் களமான ஹைதராபாத் !

ஹைதராபாத்:தெலுங்கானா தனி மாநிலம் கோரி ஆந்திர மாநில தலைநகர் ஹைதராபாத்தில் நடந்த பேரணியில் வன்முறை வெடித்தது. பல இடங்களிலும் தெலுங்கானா ஆதரவாளர்கள் மற்றும் போலீசாருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. ஆந்திரத்தைப் பிரித்து தெலங்கானா தனி மாநிலம் அமைப்பதற்கு ஆதரவு தெரிவித்து ஹைதராபாத்தில் உசேன் சாகர் ஏரி அருகே உள்ள நெக்லஸ் சாலையில் ஞாயிற்றுக்கிழமை பேரணி நடத்த
தெலங்கானா கூட்டு நடவடிக்கைக் குழு (ஜே.ஏ.சி.) அழைப்பு விடுத்திருந்தது.  இதற்கு முதலில் அனுமதி மறுத்த ஆந்திர அரசு, பின்னர் மாலை 3 மணி முதல்7 மணி வரை பேரணி நடத்த அனுமதி வழங்கியது. இந்தப் பேரணியில் கலந்து கொண்டவர்கள் ஆங்காங்கே பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீஸாருடன் மோதலில் ஈடுபட்டனர்.
பேரணியில் கலந்து கொள்ள உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் முயற்சித்தபோது அவர்களை போலீஸார் தடுத்தனர். இதனால் மாணவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையில் பல்கலைக்கழக வளாகத்தில் மோதல் வெடித்தது. போலீஸார் மீது அவர்கள் கற்களை வீசித் தாக்கினர். பதிலடியாக கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி அவர்களைக் கலைக்க போலீஸார் முயன்றனர். சில மாணவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், உசேன் சாகர் ஏரி அருகே பேரணியில் கலந்து கொண்டவர்கள் தடை ஆணைகளை மீறி ஆந்திர தலைமைச் செயலகத்தை நோக்கிச் செல்ல முயன்றனர். அவர்கள் மீது போலீஸார் தண்ணீரைப் பீய்ச்சியடித்தனர். கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் வீசினர். தலைமைச் செயலகம், முதல்வர் அலுவலகம் மற்றும் உயர் பாதுகாப்புப் பகுதிகள் செல்லும் சாலைகளை போலீஸார் சீல் வைத்தனர்.
தலைமைச் செயலகம் அருகில் உள்ள  ‘தெலுங்குத் தாய்’ மேம்பாலத்தில் குவிந்திருந்த தெலங்கானா ஆதரவாளர்கள், போலீஸார் மீது கற்களை வீசினர். இதில் சில போலீஸார் காயமடைந்தனர். ரவீந்திர பாரதி பகுதிக்கு முன்னேற முயன்ற ஆதரவாளர்களை போலீஸார் விரட்டியடித்தனர்.
இதேபோல், ஐமேக்ஸ் திரையரங்கு, கைரதாபாத் மற்றும் நெக்லஸ் சாலையை நோக்கிச் செல்லும் சாலைகளிலும் போலீஸார் மீது கல்வீச்சு நடைபெற்றது. அவர்களைத் தடியடி நடத்திக் கலைக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டனர். பேரணியால் ஹைதராபாத் நகரமே சில மணிநேரங்களுக்குப் போர்க்களம் போல் காட்சியளித்தது. பல்வேறு சாலைகளிலும் கோஷங்களை எழுப்பியபடி ஆதரவாளர்கள் சென்று கொண்டிருந்தனர்.
எம்.பி.க்கள் மறியல் – கைது: தெலங்கானா பகுதியைச் சேர்ந்த எம்.பி.க்கள் முதல்வர் கிரண்குமார் ரெட்டியின் அலுவலகத்துக்குச் சென்று ஆதரவாளர்கள் கைது செய்யப்படுவது குறித்து புகார் தெரிவிக்கத் திட்டமிட்டனர்.
அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து மண்டா ஜெகந்நாதம், மது யாஷ்கி கெளடு, ஜி.விவேக், கட்டா சுகேந்தர் ரெட்டி, ராஜையா ஆகிய எம்.பி.க்களும் முன்னாள் எம்.பி.கேசவ ராவும் முதல்வர் அலுவலகம் முன் மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது காங்கிரஸ் எம்.பி. மது யாஷ்கி கைடு, போலீஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “எனது தொகுதியைச் சேர்ந்த கட்சித் தொண்டர்கள் ஹைதராபாத்துக்கு வந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுக் கைது செய்யப்படுகின்றனர்.
எங்கள் கட்சி எம்.பி.க்கள் பலரும் கைதாவதாக எனக்குத் தகவல் வருகிறது. இது தொடர்பாக முதல்வைரைச் சந்திக்க விரும்பினோம். ஆனால் எங்களை போலீஸார் தடுப்பதைக் கண்டித்து மறியலில் ஈடுபட்டுள்ளோம்.” என்றார்.
பேரணிக்கு அரசு அனுமதி அளித்திருந்தும், ஆதரவாளர்களை போலீஸார் அத்துமீறிக் கைது செய்வதற்கு எம்.பி.க்கள் கொதிப்புடன் கண்டனம் தெரிவித்தனர். தர்னா போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
இது குறித்து தெலுங்கு தேசம், தெலங்கானா ராஷ்டிர சமிதி, பா.ஜ.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கூறுகையில், பேரணியில் பங்கேற்க வந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கைது செய்யப்பட்டதாக குற்றம் சாட்டினர். முன்னதாக, பேரணியை முன்னிட்டு ஹைதராபாத் நகர் முழுவதும் போலீஸார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய ரிஸர்வ் போலீஸார் உள்பட துணை ராணுவப் படையினரும் ஏராளமான அளவில் குவிக்கப்பட்டிருந்தனர். வன்முறை அச்சம் காரணமாக, 27 ரயில்களை தென் மத்திய ரயில்வே ரத்து செய்தது. ஆந்திர அரசுப் போக்குவரத்துக் கழகம் ஹைதராபாதில் சில பஸ் சேவைகளை ரத்து செய்திருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக