வியாழன், அக்டோபர் 11, 2012

கேரளாவில் பதுங்கியிருக்கும் துரை தயாநிதி... தனிப்படை போலீஸார் விரைந்தனர் !

மதுரை: மதுரை கிரானைட் மோசடி வழக்கில் சிக்கி தலைமறைவாகியுள்ள மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி கேரளாவில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தனிப்படை போலீஸார் கேரளாவுக்கு விரைந்துள்ளனர். பல ஆயிரம் கோடி கிரானைட் மோசடி வழக்கில் பி.ஆர். பழனிச்சாமி கைது
செய்யப்பட்டுள்ளார். அவர் மீது இதுவரை 31 வழக்குகள் போடப்பட்டுள்ளன. அதேசமயம், பழனிச்சாமியின் மகன்கள் இருவர், துரை தயாநிதி உள்ளிட்ட 40 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களைப் பிடிக்க பல தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் துரை தயாநிதியைப் பிடிக்க போலீஸார் தீவிரமாக முயன்று வருகின்றனர். இதுதொடர்பாக துரையின் மனைவி அனுஷா, மாமனார், மைத்துனர் உள்ளிட்ட பலரையும் பிடித்து விசாரித்துள்ளனர்.
மேலும் துரை தயாநிதியின் நெருங்கிய நண்பர்கள் பலரையும் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். துரையின் திரைப்பட நிறுவனமான கிளவ்ட் நைன் நிறுவனத்தின் மேலாளர்கள் சித்தார்த், நிஷாந்த் ஆகியோருக்கு சம்மன் போயுள்ளது. ஆனால் அவர்கள் இருவரும் ஊரில் இல்லை, தாய்லாந்து போய் விட்டதாக கூறப்படுகிறது.
இந்த பின்னணியில் தற்போது துரை தயாநிதி கேரளாவில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு ஒரு தகவல் வந்துள்ளதாம். அதாவது கேரளாவில் ஒரு ஆய்ர்வேத மையத்தில் அவரைப் பார்த்ததாக போலீஸுக்கு தகவல் வந்துள்ளதாம். இதையடுத்து தனிப்படை போலீஸார் அங்கு விரைந்துள்ளனர். ஆயுர்வேத சிகிச்சை மையங்களில் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம்.
பிடிவாரண்ட் - விசாரணை 12ம் தேதிக்கு ஒத்திவைப்பு
இதற்கிடையே, துரை தயாநிதிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மதுரை தனிப்படை போலீஸார் மேலூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் துரை தயாநிதிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கக் கோரும் மனுவை இரண்டு நாட்களுக்கு முன்பு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், துரை தயாநிதி சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில், தன் மீதான வழக்குகளைக் கைவிட கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விசாரணை குறித்த விவரத்தை மேலூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த துரை தயாநிதி தரப்பு வக்கீல்கள், போலீஸார் கோரியிருந்த பிடிவாரண்ட் உத்தரவுக்கு தடை விதிக்க கோரினர்.
இதை விசாரித்த மாஜிஸ்திரேட் ஜெயக்கு்மார், விசாரணையை 12ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக