அங்காரா: துருக்கி-சிரியா எல்லையில் சிரியாவுக்கெதிரான தாக்குதலை துருக்கி தீவிரப்படுத்தியுள்ளது. துருக்கியில் ஹதாய் பகுதியில் குவேக்டி என்று கிராமத்தில் சிரிய இராணுவம் ராக்கெட் தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து துருக்கி பதிலுக்கு தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த புதன் கிழமை துருக்கியின் எல்லை கிராமத்தில் சிரிய இராணுவம் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் ஐந்து துருக்கி நாட்டவர்கள்
கொல்லப்பட்டனர். இந்த நிகழ்வைத் தொடர்ந்து துருக்கி சிரியா மீது படையெடுத்து தாக்குதல் நடத்த முடிவெடுத்தது. முன்னதாக துருக்கி பாராளுமன்றம் துருக்கி பிரதமர் ரஜப் தய்யிப் உர்துகானுக்கு சிரியா மீது படையெடுக்க அனுமதி வழங்கியது.
சிரியாவில் கலகம் தொடங்கிய பின் கடந்த புதன் கிழமைதான் துருக்கி சிரியா மீது முதன் முதலாக தனது தாக்குதலை ஆரம்பித்துள்ளது. துருக்கியின் தாக்குதலில் சிரிய இராணுவப் படையினர் பலர் கொல்லப்பட்டுள்ளனர். நட்பு நாடுகளாக இருந்த சிரியாவும், துருக்கியும் சிரியாவில் மக்கள் எழுச்சி ஏற்பட்டதற்குப் பிறகு பிரிந்து போயினர். மக்கள் எழுச்சியை ஒடுக்குவதற்காக சிரிய சர்வாதிகாரி ஆஸாத் எடுக்கும் மக்கள் விரோதத் தாக்குதல்களுக்குப் பிறகு துருக்கி தனது உறவை சிரியாவுடன் முறித்துக்கொண்டது.
சிரியா நேற்று துருக்கி மீது நடத்திய தாக்குதலில் யாரும் கொல்லப்பட்டதாக தகவல் இல்லை. “எங்களைத் தாக்கினால் திருப்பியடிக்க தயங்கமாட்டோம்” என்று துருக்கி பிரதமர் ரஜப் தய்யிப் உர்துகானின் பிரகடனம் செய்திருந்தார். அதன் பிறகு உடனே துருக்கி சிரியா மீது தாக்குதலை ஆரம்பித்தது.
சிரிய குடிமக்கள் சுமார் ஒரு லட்சம் பேர் துருக்கியில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். சிரியாவில் அரசுக் கெதிராகத் தாக்குதல் நடத்துபவர்களும் துருக்கியை மையமாகக் கொண்டுதான் இயங்குகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக