திங்கள், நவம்பர் 21, 2011

இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு பேர் கொலைச் செய்யப்பட்டது போலி என்கவுண்டரில் – எஸ்ஐடி அறிக்கை!!!


இஷ்ராத் வழக்கு: என்கவுண்டர் போலியானது; சிறப்பு புலனாய்வு அமைப்பு தகவல்அகமதாபாத்:குஜராத்தில் முஸ்லிம் கல்லூரி மாணவியான இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு பேர் கொல்லபட்டது போலி என்கவுண்டரில் என்று சிறப்பு புலனாய்வுக் குழு(எஸ்.ஐ.டி) குஜராத் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.முஸ்லிம் கல்லூரி மாணவியான இஷ்ரத் ஜஹான், ஜாவேத் ஷேக் என்கிற பிரனீஷ் பிள்ளை, அம்ஜத் அலி ராணா மற்றும் ஜீஷன் ஜோஹார் ஆகியோர் 2004ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி அகமதாபாத் அருகே குற்றப் பிரிவு போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்
. இதுகுறித்துக் கூறிய குஜராத் காவல்துறை, இந்த நால்வரும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும், முதல்வர் நரேந்திர மோடியைக் கொல்ல வந்த படையினர் என்றும் தெரிவித்தது.
ஆனால் இஷ்ரத் உள்ளிட்ட நான்கு பேரும் அப்பாவிகள் என்றும், இவர்களை போலி என்கவுண்டரில் கொலை செய்துள்ளனர் என்றும் கூறி இஷ்ரத்தின் தாயார் ஷமீமா கெளசர், பிரனீஷின் தந்தை கோபிநாத் பிள்ளை ஆகியோர் குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர்.
இதையடுத்து உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் குஜராத் உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது. மேலும் இந்த வழக்கின் விசாரணையையும் அது நேரடியாக கண்காணித்து வருகிறது.
2004-ஆம் ஆண்டு ஜூன் 15-ஆம் தேதி இந்த என் கவுண்டர் நடந்ததாக மோடியின் போலீஸ் கூறியது. ஆனால், அதற்கு முன்பாகவே இந்த என்கவுண்டர் நடந்துவிட்டதாக சிறப்பு புலனாய்வுக் குழு  கூறியுள்ளது.
நீதிபதிகளான ஜெயந்த் பட்டேல்,  அபிலாஷ குமாரி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் புலனாய்வின் இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க கடந்த அக்டோபர் மாதம் ஏழாம் தேதி சிறப்பு புலனாய்வு குழுவிற்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. அதன்படி கடந்த வெள்ளிக்கிழமையன்று எஸ்ஐடி தனது இறுதி அறிக்கையை சமர்ப்பித்தது. அதில் இஷ்ரத் ஜஹான் உள்ளிட்டோர் போலி என்கவுண்டரில்தான் கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து என்கவுண்டர் சம்பவத்தில் தொடர்பு கொண்ட அத்தனை போலீஸார் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் 302 வது பிரிவின் படி கொலைக் குற்ற வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எஸ்ஐடியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பிற விவரங்களை உயர்நீதிமன்றம் வெளியிடவில்லை.
எஸ்.ஐ.டி தாக்கல் செய்த அறிக்கையில் இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் நடப்பதற்கு முன்னரே கொலைச் செய்யப்பட்டுவிட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கின் விசாரணையை மத்திய புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்குமாறு எஸ்.ஐ.டி கூறியுள்ளது. குஜராத் முஸ்லிம் இனப் படுகொலைகள் நடக்கும் வேளையில் அம்மாநில உளவுத்துறை தலைவராக பணியாற்றிய ஸ்ரீகுமார் இதுக்குறித்து கூறுகையில்; “குஜராத் அரசின் போக்கு தற்போது அம்பலமாகியுள்ளது. இஷ்ரத் ஜஹான் சம்பவம் நடந்த அன்று கொல்லப்படவில்லை என்ற வாதம் உண்மையாகியுள்ளது. 2002ல் நடந்த கலவரங்கள், போலீஸ் அடக்குமுறைகள், கொலைகள் உள்ளிட்டவற்றுக்கு குஜராத் அரசே காரணம் என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக