புதன், நவம்பர் 30, 2011

அன்னாவை 'அமுக்கிய' சில்லறை வணிகம்!; இத.. இதைத் தான் மத்திய அரசும் எதிர்பார்த்தது

Anna Hazare and Wal Martடெல்லி: சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் விவகாரம் தொடர்பாக இன்று மத்திய அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம் தோல்வியில் முடிந்தது.இந்த விவகாரம் காரணமாக கடந்த 3 நாடாளுமன்றம் முடங்கி வருகிறது. மத்திய அரசின் இந்தத் திட்டத்துக்கு எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருவதால் நாடாளுமன்றம் இயங்கவில்லை.
இதில் ஒருமித்த கருத்தை எட்டி நாடாளுமன்றத்தை அமைதியாக

இயங்கச் செய்வதற்காக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. ஆனால், இதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதில் மத்திய அரசு தீவிரமாக இருக்க, அதை ஏற்க மாட்டோம் என காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சிகளான திமுக, திரிணமூல் காங்கிரஸ் ஆகியவை கூறிவிட்டன.

இந் நிலையில் இன்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் திமுக தனது நிலையை தெளிவுபடுத்தியது. அதே போல பாஜக, இடதுசாரிகள், அதிமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க் கட்சிகளும் அன்னிய முதலீட்டை ஏற்க மாட்டோம் என்று அறிவித்தனர்.

இதனால் இக் கூட்டத்தில் ஒருமித்த கருத்து ஏதும் எட்டப்படவில்லை. எந்த முடிவையும் எடுக்காமல் கூட்டம் முடிவடைந்தது.

என்ன ஆனாலும் சரி, அன்னிய முதலீட்டை அனுமதிக்க மாட்டோம் என மத்திய அரசு அறிவிக்கும் வரை நாடாளுமன்றத்தை நடத்த விட மாட்டோம் என எதிர்க் கட்சிகள் திட்டவட்டமாக கூறிவிட்டன.

லோக்பால், கருப்புப் பண விவகாரம் ஆகிய பிரச்சனைகளை மையமாக வைத்தே கடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பிரச்சனை கிளப்பப்பட்டது. இதில் அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ் ஆகியோருக்கு பெரும் முக்கியத்துவமும் கிடைத்தது.

இந்தக் கூட்டத் தொடரிலும் அன்னா, ராம்தேவ் ஆகியோர் முக்கியத்துவமும் விளம்பரமும் கிடைத்துவிடக் கூடாது என்று திட்டமிட்ட மத்திய அரசு. சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு என்ற குண்டைத் தூக்கிப் போட்டு லோக்பால், கருப்புப் பண விவகாரத்தை அப்படியே அமுக்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.

அன்னா.. ராம்தேவ் என்று கூப்பாடு போட்டு வந்த மீடியாக்கள் இப்போது சில்லறை வணிகம், அன்னிய முதலீடு, வால் மார்ட் என்று திசை மாறிவிட்டன. இதைத் தான் மத்திய அரசும் எதிர்பார்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக