அன்னா ஹசாரே நேற்று தானே வாயைக் கொடுத்து, வம்பில் மாட்டிக் கொண்டார். சரத் பவாரை அடித்தது குறித்து அவர் தெரிவித்த கருத்து, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அமைச்சர் சரத் பவார் நேற்று டில்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது, அவரை சீக்கிய வாலிபர் ஒருவர் கன்னத்தில் அறைந்தார். இதுகுறித்து கருத்து கேட்க, மகாராஷ்டிர மாநிலம் ராலேகான் சித்தியில் உள்ள ஹசாரேயின் வீட்டில், நிருபர்கள் குவிந்தனர்.
சரத் பவார் தாக்கப்பட்டது குறித்து, அவரிடம் சிலர் தெரிவித்தனர். உடன் ஹசாரே, "சரத் பவாரை வாலிபர் அடித்தாரா? ஒரே ஒரு அடி தான் அடித்தாரா?' என்றார். இதைக் கேட்டதும், நிருபர்கள் அனைவரும் சிரித்து விட்டனர்.பின்னர், தன் அறையிலிருந்து வெளியே வந்த ஹசாரே கூறியதாவது: பவார் தாக்கப்பட்டது போன்ற வன்முறை செயல்கள் நல்லதல்ல. தாக்கியவர் மிகுந்த கோபத்தில் இருந்திருக்கலாம். கோபம் நல்லதல்ல. யாரிடமும் வன்முறையைக் காட்டும்படி, நமது அரசியல் சட்டம் சொல்லவில்லை. நான் பார்வையாளர்கள் 300 பேருடன் பேசிக் கொண்டிருந்த போது, பவார் தாக்கப்பட்டதாக சிலர் குறிப்பு அனுப்பினர். அப்போது தான், "ஒரே ஒரு அடி தான் அடித்தனரா அல்லது வேறு ஏதாவது நிகழ்ந்ததா' என, அவர்களிடம் கேட்டேன். பவாரின் மீதான தாக்குதல் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். இவ்வாறு ஹசாரே கூறினார். ஹசாரே அணியைச் சேர்ந்த கிரண் பேடி கூறுகையில், ""முறையான லோக்பால் மசோதா நிறைவேற்றப்படவில்லை எனில், அரசியல்வாதிகள் இதுபோல் குறிவைத்து தாக்கப்படலாம்,'' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக