வெள்ளி, நவம்பர் 25, 2011

33 ஆண்டு ஆட்சி செய்த ஏமன் அதிபர் சலே பதவி விலக ஒப்புதல்!!!

ஏமன் நாட்டில் கடந்த 33 ஆண்டுகளாக அலி அப்துல்லா சலே அதிபராக இருந்து வந்தார். அவரை எதிர்த்து கடந்த 10 மாதங்களாக மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். சலே பதவி விலகுவதுடன் அவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டுமென போராட்டக்காரர்கள் கூறி வந்தனர். 
மக்களின் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், அலி அப்துல்லா சலே பதவி விலக முன் வந்தார். இதையடுத்து,

எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். ரியாத் அரண்மனையில் நேற்று முன் தினம் நடந்த நிகழ்ச்சியில் சவுதி மன்னர் அப்துல்லா முன்பாக ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, அதிபர் பதவியில் இருந்து சலே உடனடியாக விலகி, பொறுப்புகளை துணை ஜனாதிபதி அப் ரப்பு மன்சூர் ஹாடியிடம் ஒப்படைத்தார். 

எனினும், எதிர்க்கட்சிகளும் இணைந்த பொதுவான அரசு அமையும் வரை அதிபர் பதவியில் சலே நீடிப்பார். இந்த ஒப்பந்தத்தை வரவேற்று தலைநகர் சனாவில் மக்கள் கொண்டாடினர். எனினும், போராட்டக்காரர்கள் ஒப்பந்தத்தை ஏற்கவில்லை. சலே முழு பொறுப்புகளையும் விட்டு ஒதுங்க வேண்டும். அவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டுமென கூறி, போராட்டத்தை தொடர்கின்றனர். இந்நிலையில், சலே போட்டுள்ள ஒப்பந்தத்தை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கவுன்சில் வரவேற்றுள்ளது. 

4 பேர் சுட்டுக்கொலை

ஏமன் தலைநகர் சனாவில் உள்ள சேஞ்ச் சதுக்கத்தில் போராட்டக்காரர்கள் நேற்றும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு காரில் வந்த மர்ம நபர்கள் திடீரென போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 4 பேர் இறந்தனர். பலர் காயமடைந்தனர். சலேவின் ஆதரவாளர்கள்தான் துப்பாக்கிச் சூடு நடத்தியது என்று காயமடைந்த இப்ராகிம் அலி என்பவர் குற்றம்சாட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக