மாவோயிஸ்டு இயக்கத்தின் முக்கிய தலைவராக திகழ்ந்தவர் கிஷான்ஜி. இவர் மேற்கு வங்க மாநிலம், மேற்கு மிட்னாப்பூரில் உள்ள வனப்பகுதியில் வைத்து இரண்டு நாட்களுக்கு முன்பு சுட்டுக்கொல்லப்பட்டார். என்கவுண்டரில் அவர் கொல்லப்பட்டதாக தீவிரவாத எதிர்ப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் அவர் போலி என் கவுண்டரில் கொல்லப்பட்டதாக மாவோயிஸ்டு இயக்கத்தினரும், ஆதரவாளர்களும் பிரச்சினையை கிளப்பினர். மனித உரிமை அமைப்புகளும் கிஷான்ஜி கொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. இவரது சாவு மாநிலத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. தெலுங்கு புரட்சிகர பாடகரும், மாவோயிஸ்டு ஆதரவாளருமான பி.வரவர ராவ் நேற்று அளித்த பேட்டி யில் கூறியதாவது:-
கொல்லப்படுவதற்கு முதல் நாளே போலீசாரால் கிஷான்ஜி கைது செய்யப்பட்டார். போலீஸ் காவலில் அவர் கொடூரமான முறையில் சித்ரவதை செய்யப்பட்டார். உடலை கீறியும், உடலில் தீவைத்தும் சித்ரவதை செய்தனர். அதன் பிறகு துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். போலி என்கவுண்டர் நடத்திய போலீசார் கிஷான்ஜியின் உடலை வனப்பகுதியில் போட்டுவிட்டனர். அவரது உடலில் காயங்கள் இல்லாத பகுதியே இல்லை. 24 மணி நேரம் போலீஸ் காவலில் சித்ரவதைக்கு ஆளாகியுள்ளார். இவ்வாறு குற்றம் சாட்டினார்.
இந்த சர்ச்சையில் இருந்து தப்ப மேற்கு வங்க அரசு எச்சரிக்கையான அணுகுமுறையை கடைப்பிடித்துள்ளது. கிஷான்ஜியின் உடல் மேற்கு மிட்னாபூரில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பொதுவாக, பிரேத பரிசோதனையின் போது, சம்பந்தப்பட்டவர்கள் தவிர யாரும் அருகில் இருக்க அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால், கிஷான்ஜியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டபோது, அவரது உறவினர் தீபாராவ், மற்றும் வரவரராவ் ஆகியோர் அருகில் இருக்கவும், படம் பிடிக்கவும் மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. பிரேத பரிசோதனை முடிந்த பின்னர், அந்த அறையை விட்டு வெளியே வந்த தீபா, தனது செல்போனில் பதிவு செய்த காட்சிகளை பத்திரிகையாளர்களுக்கு காட்டினார்.
அப்போது அவர் கூறுகையில் கிஷான்ஜி போலீஸ் காவலில் சித்ரவதை செய்யப்பட்டு பின்னர் கொல்லப்பட்டுள்ளார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. என் கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீசார் கூறுவது முழுக்க முழுக்க பொய் என்றார். சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க, பிரேத பரிசோதனை அறிக்கையை பொதுமக்கள் அறியும் வகையில் வெளியிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தி இருக்கிறது.
பிரேத பரிசோதனையின் முதற்கட்ட அறிக்கையில் கிஷான்ஜி சித்ரவதை செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கிஷான்ஜி 6 முறை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் உடலில் 6 தோட்டாக்கள் பாய்ந்து இருக்கின்றன. தவிர 14 இடங்களில் காயங்கள் உள்ளன. இதில் 4 காயங்கள் மிகவும் ஆழமானவை. இந்த காயங்கள் ஏற்பட்டதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. ரசாயன பரிசோதனையில்தான் தெரிய வரும். போலீசார் சித்ரவதை செய்வதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லைÓ என்று கூறப்பட்டுள்ளது.
டி.ஐ.ஜி. (சி.ஐ.டி.) கே.ஜெயராமன் அளித்த பேட்டியில் போலி என்கவுண்டர் என்ற குற்றச்சாட்டின் பின்னணியில் ஏதாவது உண்மைகள் இருக்கிறதா? என்று கண்டறிய எல்லாவித அம்சங்களிலும் நாங்கள் விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்றார். இந்நிலையில், கிஷான்ஜியின் உடல் இன்று ஆந்திரா கொண்டு செல்லப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக