புதன், நவம்பர் 30, 2011

கட்டண உயர்வால் பஸ்களில் ஏறவே அஞ்சும் பயணிகள்-காற்று வாங்கும் அரசு பஸ்கள்

சென்னை: பஸ் கட்டண உயர்வின் அதிர்ச்சியிலிருந்து இன்னும் மக்கள் மீளவில்லை என்று தெரிகிறது. கடுமையான உயர்வு காரணமாக அரசு பஸ்களில் ஏறவே மக்கள் அஞ்சுகின்றனர். இதனால் சென்னையிலிருந்து வெளியூர் போகும் குறிப்பாக தொலை தூர ஊர்களுக்குப் போகும் பஸ்கள் காற்று வாங்குகின்றன. ஏறுங்க சார் என்று பயணிகளிடம் நடத்துனர்கள் கெஞ்சும் அளவுக்கு நிலைமை போயுள்ளதாம்.சமீபத்தில் தமிழக அரசு பஸ் கட்டணங்களை அதிரடியாக உயர்த்தியது. மேலும் அதை இரவோடு இரவாக அமல்படுத்தியதால் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் இந்த அதிர்ச்சி போதாதென்று, பஸ்களின் நடத்துனர்கள் தாறுமாறாக டிக்கெட் போட்டு மக்களை மேலும் அதிர்ச்சியில் மூழ்கடித்தனர்.
அரசு சொல்லிய கட்டண உயர்வுக்கும், இவர்கள் வாங்கிய கட்டணத்திற்கும பெரும் வித்தியாசம் இருந்தது. மேலும், சாதாரண பஸ்களை அடியோடு குறைத்து விட்ட போக்குவரத்துக் கழகங்கள், எக்ஸ்பிரஸ் பஸ்களை அதிகரித்து விட்டது.

இதன் காரணமாக குறைந்தபட்ச கட்டணமே 6 முதல் 10 வரை எகிறிப் போய் விட்டது. இது மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தற்போது பஸ் கட்டண உயர்வு காரணமாக மக்கள் ரயில்களை நோக்கி படையெடுக்க ஆரம்பித்து விட்டனர். சென்னையில் புறநகர் ரயில்களில் வழக்கத்தை விட பல மடங்கு கூட்டம் காணப்படுகிறது.

இதை நிலைதான் சென்னையிலிருந்து வெளியூர்களுக்குச் செல்லும் பஸ்களிலும் காணப்படுகிறது. வெளியூர் பஸ்களில் ஏறவே மக்கள் இப்போது விரும்புவதில்லை. மாறாக ரயில்களை நோக்கிச் செல்கின்றனர். குறைந்த கட்டணம், கூடுதல் சலுகைகள் என்பதால் ரயில் லேட்டாக போனாலும் பரவாயில்லை என்ற மன நிலைக்கு மக்கள் வந்து விட்டனர். இதனால் பகல் நேர தொலை தூர ரயில்களிலும் கூட கூட்டம் அலை மோதுகிறது.

கோயம்பேடு பஸ் நிலையத்திற்குள் வழக்கமாக எள் விழுந்தால் எண்ணெய் ஆகி விடும் அளவுக்கு கூட்டம் நெக்கியடிக்கும். ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக உள்ளது. துண்டை உதறி கீழே போட்டு விரித்துப் படுத்துக்கொள்ளலாம் போல. அந்த அளவுக்கு படு ப்ரீயாக இருக்கிறது பஸ் நிலையம். கூட்டத்தையேக் காணோம்.

பஸ்களிலும் கூட கூட்டமே இல்லாமல் காற்று வாங்குகின்றன. மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, நாகர்கோவில், தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தொலை தூர ஊர்களுக்குச் செல்லும் பஸ்கள்தான் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளன. இந்தப் பஸ்களில் ஏற் மக்களைக் காணவில்லை. வெகு சிலர்தான் பஸ்களை நாடி வருகின்றனர். இவர்களும் கூட ரயில்களில் இடம் கிடைக்காமல் வருகிறவர்களாக இருக்கின்றனர். அல்லது கட்டண விவரம் தெரியாதவர்களாக உள்ளனர்.

இப்படி அடியோடு பயணிகள் கூட்டம் நின்று போய் விட்டதால் போக்குவரத்துக் கழகங்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

பஸ் கட்டண உயர்வால் மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதைப் பயன்படுத்தி கூடுதல் ரயில்கள் விட வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சகத்தை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஒருவேளை கூடுதல் தொலைதூர ரயில்கள், புறநகர் ரயில்களை இயக்க மத்திய அரசு முடிவு செய்தால், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் பெரும் கஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்கிறார்கள்.

மொத்தத்தில் அவலை நினைத்து உரலை இடித்த கதையாகியுள்ளது அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் நிலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக