திங்கள், நவம்பர் 28, 2011

ரூ.50 லட்சம் நன்கொடை மோசடி வழக்கில் கிரண்பேடி மீது எஃப் ஐ ஆர்!


புதுடெல்லி : ரூ. 50 லட்சம் நன்கொடை மோசடி செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரில், டெல்லி மெட்ரோபாலிட்டன்  நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, கிரண்பேடி மீது டெல்லி காவல்துறையினர் நேற்று மோசடி வழக்குப் பதிவு செய்தனர். காவல்துறையினர், துணை ராணுவத்தினரின் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கு இலவச கணினி கல்வி கற்றுக் கொடுத்ததில் கிரண்பேடி மோசடியில் ஈடுபட்டதாக வக்கீல் தேவிந்தர் சிங் சவுகான் என்பவர் டெல்லி நீதிமன்றத்தில் புகார் கொடுத்தார். மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.50 லட்சம் நன்கொடை பெற்று, வேதாந்தா பவுன்டேஷனுடன் இணைந்து இந்த நிதி மோசடியில் ஈடுபட்டதாக கிரண்பேடி மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த டெல்லி கூடுதல் தலைமை மெட்ரோபொலிடன் மாஜிஸ்திரேட் அமித் பன்சால், கிரண்பேடி மீது டெல்லி காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து கிரண்பேடி மீது டெல்லி குற்றப்பிரிவு காவல்துறையினர் மோசடி வழக்குகள் பதிவு செய்ததாக, துணை ஆணையர் அசோக் சந்த் தெரிவித்தார். இது குறித்து கருத்து தெரிவித்த கிரண்பேடி, ‘‘நல்லது செய்பவர்களுக்கு இது போன்ற சிக்கல்கள் வரும். காவல்துறை அதிகாரியாக இருந்த எனக்கு இந்த வழக்கை சந்திக்க வலுவான ஆதாரங்கள் உள்ளன. லட்சியவாதி தொடர்ந்து நல்லது செய்ய வேண்டும். அதுதான் வாழ்க்கை என விவேகானந்தர் கூறியிருக்கிறார்.அதன்படி பல தடைகள் வந்தாலும் எனது பணியை தொடர்வேன்’’ என்றார்.
கிரண்பேடி மீது இரண்டாவதாக கூறப்படும் இந்த குற்றச்சாட்டு சிவில் சொசைட்டி அமைப்பை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. சுவாமி அக்னிவேஷ் கூறுகையில், ‘‘கிரண்பேடி மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளதால் இது  சற்று தீவிரமான பிரச்னை’’ என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக