புதன், ஆகஸ்ட் 29, 2012

அணுவிபத்து இழப்பீடு மசோதா தாமதம் ஏன்? – டி.ஏ.இயிடம் பாராளுமன்ற குழு கேள்வி !

அணுவிபத்து இழப்பீடு மசோதா தாமதம் ஏன்புதுடெல்லி:கடந்த 13 மாதங்களாக அணுசக்தி நிலையங்களில் விபத்து ஏற்பட்டால் அணு உலைக்குத் தேவையான இயந்திரங்களை அளித்த நிறுவனத்திடம் இழப்பீடு கோருவது தொடர்பான மசோதாவை உருவாக்குவதில் ஏன் தாமதம் ஏற்பட்டது? என்று பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய சார்புநிலை சட்டக் குழு அணு சக்தித் துறையிடம் (டி.ஏ.இ) கேள்வி எழுப்பியுள்ளது. இம்மசோதா குறித்து மார்க்சிஸ்ட் கட்சியை(சி.பி.எம்)ச் சார்ந்த பி. கருணாகரன் தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய
சார்புநிலை சட்டக்குழு ஆராய்ந்தது. இதைத் தொடர்ந்து அக்குழு அளித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பது:
‘விபத்து ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட அணுமின் நிலைய நிர்வாகம் இழப்பீட்டைக் கோருவதற்கான கால அளவுக்கு உச்சவரம்பு (5 ஆண்டுகள்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிகபட்ச இழப்பீட்டுத் தொகையும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நடவடிக்கைகளால், இச்சட்டத்தில் இருக்க வேண்டிய கடுமை, நீர்த்துப் போயுள்ளது. எனவே, இந்த விதிமுறைகளில் திருத்தம் கொண்டுவர வேண்டும்.
இதற்கு டி.ஏ.இ அளித்த விளக்கத்தில், ‘அணு உலை தொடர்பான பொருள்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்குத்தான் அணு சக்தி ஒழுங்குமுறை வாரியம் உரிமம் வழங்கும், அதன் பின் அதை புதுப்பித்து வழங்கும். அணு உலையின் பாதுகாப்பு ஏற்பாடுகளை அவ்வப்போது தேவைக்கேற்ப நிர்வாகத்தினர் மேம்படுத்த வேண்டும் என்று ஒழுங்குமுறை ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது. இதற்காக பல்வேறு நிறுவனங்களிடம் பொருள்களை வாங்க வேண்டியிருக்கும். இந்நிலையில், அணு உலைக்கான பொருள்களை முதன் முதலில் சப்ளை செய்யும் நிறுவனங்களை, குறிப்பிட்ட காலத்துக்குமேல், இழப்பீடு தொடர்பாக பொறுப்பாக்க முடியாது.
அவ்வாறு குறிப்பிட்ட காலத்துக்கு மேல் அவர்களைப் பொறுப்பாக்கினால், அந்நிறுவனங்கள் அதிகத் தொகைக்கு காப்பீடு எடுக்கும். அதற்கான பிரீமியம் தொகையை அணுமின் நிலைய நிர்வாகங்கள் மீதுதான் சுமத்தும். இது மறைமுகமாக நமது முதலீட்டுத் தொகையை அதிகரித்து, அதன் விளைவாக மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும்.
அணு உலை பொருள்களுக்கான இழப்பீட்டுக் காலத்தை நீட்டித்தால், அவற்றை சப்ளை செய்யும் நிறுவனங்கள் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் காலமும் அதிகரிக்கும். இது அணுமின் நிலையத்தை செயல்படுத்துவதற்கான செலவை அதிகரித்துவிடும்’ என்று டிஏ.இ கூறியது.
இதற்கு பதில் வாதத்தை முன்வைத்துள்ள பாராளுமன்ற சார்புநிலை சட்டக்குழு, ”குறிப்பாக பாதிக்கப்பட்ட ஒருவர், இச்சட்டத்தின் கீழ் தனக்கு வழங்கப்பட்ட இழப்பீடு போதுமானது அல்ல என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, அதில் வெற்றிபெறுகிறார் என வைத்துக்கொள்வோம். அப்போது, பொருள்களை சப்ளை செய்த நிறுவனத்தை, அணுமின் நிலைய நிர்வாகம் மீண்டும் அணுகி இழப்பீட்டைப் பெற முடியுமா என்பது குறித்து போதிய விளக்கம் இல்லை” என்று கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக