வெள்ளி, ஆகஸ்ட் 31, 2012

குமரி:ஹிந்துத்துவா தீவிரவாதத்தை மூடிமறைக்க பொன். ராதாகிருஷ்ணன் நடத்திய போராட்ட நாடகம் !

ஹிந்துத்துவா தீவிரவாதத்தை மூடிமறைக்க பொன். ராதாகிருஷ்ணன் நடத்திய போராட்ட நாடகம்!நாகர்கோவில்:முக்கடல்களைப் போலவே முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள் என மூன்று சமூகமும் நல்லிணக்கத்தோடு கைக்குலுக்கி வாழ்ந்த மண் குமரி மாவட்டம். 1982-ஆம் ஆண்டு நிகழ்ந்த மண்டைக்காடு கலவரம் இம்மூன்று மதத்தினர் இடையே நிலவிய நல்லிணக்கத்திற்கு விழுந்த முதல் அடியாக மாறியது. 1993-ஆம் ஆண்டு மணலிக்குழிவிளை என்ற பகுதியில் கிறிஸ்தவர்களின் வழிப்பாட்டுத்தலம் நள்ளிரவில் ஹிந்துத்துவா பாசிச சக்திகளால் இடித்து
தள்ளப்பட்டது. இச்சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பதட்டத்தை உருவாக்கியது. அடுத்து வந்த காலக்கட்டங்களில் வட நாட்டிலிருந்து தமிழகத்திற்கு ஏற்றுமதிச் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் வன்முறையைத் தூண்ட பாசிஸ்டுகளுக்கு மிகப்பெரிய ஆயுதமாக மாறியது. இந்த ஊர்வலத்தை முன்னின்று நடத்தபவர்கள் ஹிந்துமுன்னணி, பா.ஜ.க சங்க்பரிவார பாசிச கும்பலாகும்.
முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவ சிறுபான்மையினரின் வணக்கஸ்தலங்கள் வழியாகத்தான் செல்வோம் என்று அடம்பிடித்து விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க ஊர்வலமாக எடுத்துச் சென்றவர்கள் மதவெறியைத் தூண்டும் கோஷங்களை சிறுபான்மையினர் வாழும் பகுதிகளில் முழங்குவது ஆண்டுதோறும் வாடிக்கையானது. கடந்த 2008-ஆம் ஆண்டு திருவிதாங்கோடு, 2010 இல் மிடாலம் ஆகிய பகுதிகளில் இவர்கள் நடத்திய வன்முறைச் செயல்களால் மாவட்டம் அதிர்ச்சியில் ஆழ்ந்தது.
அதேவேளையில் ஹிந்து சமூகத்தைச் சார்ந்தவர்கள் தனிப்பட்ட காரணங்களால் தாக்கப்பட்டாலோ, இறந்தாலோ பிற சமூகத்தினர் மீது பழியைப் போட்டு வகுப்புவாத வெறியை வளர்ப்பதிலும் சங்பரிவார்கள் குளிர்காய்வது உண்டு. அண்மையில் முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்த ஒரு இளம்பெண்ணை கடத்திச் சென்று திருமணம் முடித்த நபர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் கொலைச் செய்யப்பட்டார். தனிப்பட்ட காரணமாக இக்கொலை நிகழ்ந்திருக்கலாம் என மக்கள் கருதிக்கொண்டிருக்கும் வேளையில் இக்கொலையை முஸ்லிம்கள் மீது சுமத்தி, அம்மக்கள் வாழும் கோட்டாறு பகுதியில் கல்வீச்சில் ஈடுபட்டும், இரவு வேளைகளில் அசம்பாவித சம்பவங்களை புரிந்தும் பதட்டத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நித்திரவிளை அருகே நடைக்காவு பகுதியில் ஆலங்கோடு தென்னிந்திய திருச்சபை ஆலயம் செயல்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சாத்தன்கோடை சேர்ந்த ஞானமுத்தன் என்பவரது வீட்டிற்கு மாலை பாஸ்டர் மற்றும் சபையை சேர்ந்தவர்கள் ஜெபம் செய்ய வந்தனர். இவர்களது வாகனங்கள் ஞானமுத்தனின் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது ஹிந்துத்துவா கும்பல் ஒன்று திடீரென அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை சேதப்படுத்தி, ஜெபம் நடத்தக்கூடாது என கோஷமிட்டனர்.
இது குறித்து ஞானமுத்தன் தரப்பினர் கொல்லங்கோடு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். கொல்லங்கோடு மற்றும் நித்திரவிளை போலீசார் சம்பவ இடம் வந்தனர். போலீசார் வந்ததும் ஹிந்துத்துவா கும்பல் கலைந்து சென்றது. தொடர்ந்து ஜெபத்தில் கலந்து கொண்டவர்கள் அவர்களது வீடுகளுக்கு திரும்பி சென்றனர். சிலர் நடைக்காவு ஜங்ஷனில் நின்றனர். அப்போது அங்கு காத்திருந்த ஹிந்துத்துவா கும்பலைச் சேர்ந்தவர்களுக்கும், இவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து ஹிந்துத்துவா கும்பலைச் சார்ந்தவர்கள், கடைகள் மீது கல்வீசி தாக்கினர். இப்பகுதியில் கிராத்தூர் தாணுமூட்டுவிளையை சேர்ந்த ஜெயராஜ் என்பவர் டெயிலரிங் கடை நடத்தி வருகிறார். இந்த கும்பல் ஜெயராஜை தாக்கியுள்ளனர். இதை கண்ட அவரது மகன் எட்வின்ராஜ்(35) தடுக்க முயன்றுள்ளார். கும்பல் எட்வின்ராஜ் மற்றும் அவரது நண்பர் ஷாஜிதாமசையும் தாக்கியுள்ளனர். பலத்த காயமடைந்த எட்வின்ராஜை மார்த்தாண்டம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரம் தனியார் ஆஸ்பத்திக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே எட்வின்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். திருவனந்தபுரம் மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரிக்கு எட்வின்ராஜ் சடலம் கொண்டு செல்லப்பட்டது. எட்வின்ராஜ் உயிரிழந்த சம்பவம் குறித்து அவது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. நள்ளிரவு உறவினர் மற்றும் பொதுமக்கள் நடைக்காவு ஜங்ஷனில் கூடினர். எட்வின்ராஜ் கொலையில் தொடர்புடையவர்களை கைது செய்ய கேட்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடம் வந்த குளச்சல் டி.எஸ்.பி., மகேஷ் மற்றும் அதிகாரிகள் அவரது உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து போலீசாரும், ஆயுதப்படை போலீசாரும் குவிக்கப்பட்டனர்.
டி.ஐ.ஜி., வரதராஜூ, எஸ்.பி., பிரவேஷ்குமார், டி.ஆர்.ஓ., பழனிசாமி, ஆர்.டி.ஓ., மோகனசந்திரன் சம்பவ இடம் வந்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். கொலையாளிகளை கைது செய்யம்படி ரோடு மறியலில் ஈடுபட்டனர். ஹெலன் டேவிட்சன் எம்.பி., எம்.எல்.ஏ., க்கள் பிரின்ஸ், புஸ்பலீலா ஆல்பன், மாவட்ட பஞ்., துணைத்தலைவர் செல்லசாமி, பஞ்., தலைவர்கள் மேரி, மேரி ஸ்டெல்லா உட்பட பலர் கலந்து கொண்டனர். நடைக்காவு பகுதியில் கடைகள், பாங்க், டாஸ்மாக் கடை அடைக்கப்பட்டிருந்தன. அன்றைய தினம் மதியம் எட்வின்ராஜின் சடலம் பிரேத பரிசோதனைக்கு பின் நடைக்காவு கொண்டு வரப்பட்டது. போராட்டக்காரர்கள் எட்வின் ராஜின் சடலத்துடன் போராட்டம் நடத்தினர். மாலை முன்னாள் எம்.எல்.ஏ., குமாரதாஸ் மற்றும் அரசியல் பிரமுகர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். போராட்டக்காரர்களுடன் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் தொடர்ந்தது.
இந்நிலையில் எட்வின்ராஜ் கொலை சம்பந்தமாக எட்வின்ராஜின் தந்தை ஜெயராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் பா.ஜ., மாவட்ட தலைவர் தர்மராஜ்(49), சாத்தன்கோடை சேர்ந்தவர்கள் குமாரவேல் மகன் லாசர்(42), பொடியப்பி மகன் முருகன்(29) தாமஸ் மகன் அஜிகுமார்(30), குமாரசுவாமி மகன் தங்கப்பன்(50), பிரான்சீஸ் மகன் சதீஷ்(28), நாணு மகன் விஜில்குமார்(25) ஆகியோர் மீது நித்திரவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் மாவட்ட பாரதீய ஜனதா தலைவர் தர்மராஜ் மீது பொய்யான வழக்கை பதிவுச் செய்துள்ளதாகவும்,  மாவட்டத்தில் வேணுகோபால் கமிஷன் பரிந்துரையை செயல்படுத்த கோரியும் குமரிமாவட்டத்தைச் சார்ந்தவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், மாநில பா.ஜ.க தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் நடத்திய அப்பட்டமான படுகொலையை மூடி மறைக்கும் நோக்கில் போராட்ட நாடகத்தை நடத்தினார். தடையை மீறி போராட்டம் நடத்த சென்றதையடுத்து வழக்கமான நடவடிக்கையாக அவரை போலீஸார் கைது செய்தனர். நாடகத்தின் உச்சக்கட்டமாக நடுரோட்டில் அமர்ந்து மறியல் செய்த பொன்.ராதாகிருஷ்ணனை போலீசார் அப்புறப்படுத்தினர்.
வேணுகோபால் கமிஷனின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கோரும் பொன்.ராதாகிருஷ்ணன், கமிஷனின் முக்கிய பரிந்துரையான ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் நடவடிக்கைகளை கட்டுப்பட்டுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருப்பதை மக்களிடம் மூடி மறைக்க முயற்சிக்கிறார். மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத இயக்கத்தினர் ஷாகா என்ற பெயரால் தீவிரவாத பயிற்சிகளில் ஈடுபடுவதும், இதர சமூகத்தினரை மிரட்டும் வகையில் ஊர்வலங்கள் செல்வதும் தொடர்கிறது.
மண்டைக்காடு உள்பட பல்வேறு கோயில் திருவிழாக்களில் ஹிந்துத்துவா இயக்கங்களின் தலைவர்கள் கலந்துகொண்டு பிற சமூகத்தினரை இழிவாக பேசி வருகின்றனர். சர்ச்சுகளுக்கு அருகில் இரவோடு இரவாக சிலையைக் கொண்டுவைத்து கோயில் கட்ட முனைவதும் இவர்களது வழக்கமாகும். இதற்கு உதாரணமாக கடந்த 2010-ஆம் ஆண்டு மணலி என்ற இடத்தில் திடீரென கிறிஸ்தவ ஆலயத்திற்கு முன்பு சிலையைக் கொண்டுவைத்த சம்பவத்தை குறிப்பிடலாம்.
ஹிந்துத்துவா தீவிரவாதிகளால் கிறிஸ்தவ போதகர்கள் தாக்கப்படும் சம்பவங்களும் குமரிமாவட்டத்தில் அரங்கேறியுள்ளன.
ஆகவே, ஹிந்துத்துவா தீவிரவாதத்தை மூடி மறைத்துவிட்டு போராட்ட நாடகம் நடத்தி பொன்.ராதாகிருஷ்ணன் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் என்பதே உண்மையான நிலவரமாகும்.
குமரி மாவட்டத்தை வன்முறைக் களமாக மாற்ற முயலும் ஹிந்துத்துவா சக்திகளை அரசு கட்டுப்படுத்துவதுடன், இவ்வியக்கத்தினர் மீது தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அரசின் தயக்கமும், தாமதமுமே இவர்கள் குமரிமாவட்டத்தில் வேரூன்ற காரணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக