புதுடெல்லி:ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்றக்கோரி போராடிய அன்னா ஹஸாரே, தன்னம்பிக்கையை இழந்து தனது குழுவை கலைத்துவிட்டு அரசியல் கட்சியை துவக்குவதாக அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அவரது குழுவில் இடம்பெற்றிருந்த அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கிரண்பேடிக்கு
இடையே கருத்துவேறுபாடுகள் தீவிரமடைந்து வருகின்றன.
அரவிந்த் கெஜ்ரிவால், அண்மையில் புதுடெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங், சோனியா காந்தி, பா.ஜ.க தலைவர் நிதின்கட்கரி ஆகியோரின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினார். மேலும் ஊழலில் காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.கவும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்று குற்றம் சாட்டினார்.
ஆனால், துவக்கம் முதலே சங்க்பரிவாரத்திற்கு விசுவாசமாக நடந்துவரும் கிரண்பேடிக்கு அரவிந்த் கெஜ்ரிவாலின் நடவடிக்கைகள் பிடிக்கவில்லை. அரவிந்த் கெஜ்ரிவாலை மறைமுகமாக தாக்கியும் பா.ஜ.கவுக்கு ஆதரவாகவும் பேட்டி அளித்திருந்தார்.
இந்நிலையில் ஊழலுக்கெதிராக பாரதிய ஜனதா கட்சி, ராம்தேவ் மற்றும் அன்னா ஹசாரே ஆகியோர் ஒருங்கிணைந்து புதிய கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று கிரண் பேடி கூறியுள்ளார்.
இதுக்குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “இந்த நாட்டில் சிபிஐ எவ்விதக் குறுக்கீடுமின்றி தனித்து செயல்பட வேண்டுமானால் நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும். ஊழலுக்கெதிராக பல குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அனைத்து குரல்களும் ஒன்றுபட வேண்டியது அவசியம்.
நாம் தனித்தனியே போராடிக் கொண்டிருந்தால் அது ஆளும் கட்சியை ஊழலுக்கு மேல் ஊழல் செய்யத் தூண்டும். இதைத் தடுக்க வேண்டுமானால் ஊழலுக்கெதிராக புதிய கூட்டணியை உருவாக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
“மத்தியில் மாற்றம் கொண்டு வருவதற்கும் இயக்கங்களை ஒருங்கிணைத்து முன்னெடுத்துச் செல்லவும் அன்னா ஹசாரே முன்வர வேண்டும். அவர் விரும்பினால் ஊழலுக்கெதிரான இயக்கத்தின் அலுவலகத்தை அவருடைய சொந்த கிராமமான ராலேகான் சித்திக்கு மாற்றிக் கொள்ளலாம். அவருடைய தலைமையில் தன்னலமற்று, கீழ்ப்பணிந்து இயங்கும் புதிய அணியை அவரே உருவாக்கிக் கொள்ளட்டும். பெங்களூரில் சிகிச்சை பெற்று வரும் ஹசாரே திரும்பியவுடன் இது குறித்து நல்ல முடிவு எடுப்பார் என்று நான் முழுமையாக நம்புகிறேன்.
ஊழலுக்கெதிரான இந்தியா இயக்கத்தில்(இந்தியா எகைன்ஸ்ட் கரப்ஸன்) பிளவு ஏற்பட்டு விட்டது. இயக்கத்தில் உள்ள சிலர் அரசியல் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றனர். சிலர் இயக்கமாகவே தொடர வேண்டும் என்று தெரிவித்தனர். இதுவே இயக்கம் பிளவுபடுவதற்குக் காரணமாக அமைந்து விட்டது” என்று கிரண்பேடி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக