புதன், ஆகஸ்ட் 29, 2012

அஸ்ஸாம்:முழு அடைப்பு, வன்முறை, துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி !

Assam fire spreads with bandh, 1 deadகுவஹாத்தி:அஸ்ஸாமில் கொக்ராஜர் மாவட்டத்தில் மீண்டும் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களில் ஒருவர் மரணமடைந்தார். ஐந்து பேருக்கு காயம் ஏற்பட்டது. மாவட்டத்தின் 3 இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின. ஸல்காதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஃபும்கி கிராமத்தில் முதலில் தாக்குதல் நிகழ்ந்தது. இங்கு யாருக்கும் காயம்
இல்லை.
பக்ரிதோலா கிராமத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார். நான்குபேருக்கு காயம் ஏற்பட்டது. துபிமாரியில் நிகழ்ந்த வன்முறையிலும் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. விஷமிகள் வீடுகளுக்கு தீவைத்தனர். போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதைத் தொடர்ந்து வன்முறையாளர்கள் ஓடிவிட்டதாக ஐ.ஜி எல்.ஆர்.பிஷ்ணோய் தெரிவித்தார்.
வன்முறையை கண்டித்து அகில அஸ்ஸாம் சிறுபான்மை மாணவர் யூனியன் அழைப்பு விடுத்த முழு அடைப்பில் மக்கள் மாமூல் வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அசம்பாவித சம்பவங்கள் அரங்கேறிய பகுதிகளில் ராணுவம் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது.
கொக்ராஜர், சிராங், துப்ரி மாவட்டங்களில் இரவு கால ஊரடங்கு உத்தரவு நீடிக்கிறது.
12 மணிநேர முழு அடைப்பிற்கு சிறுபான்மை மாணவர் யூனியன் அழைப்பு விடுத்திருந்தது. போடோலாண்ட் டெரிட்டோரியல் கவுன்சிலை கலைத்துவிட்டு அதன் தலைவர் ஹக்ராமா மொஹிலாரியை கைது செய்ய முழு அடைப்பை நடத்தியவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
பொங்கைகான் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையை மறித்தவர்கள் மீது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் காயமடைந்தனர்.
துப்ரி மாவட்டத்திலும் வன்முறை நீடிக்கிறது. இங்கு மொஹிலாரியின் உருவத்தை தீ வைத்துக் கொளுத்தியவர்களை கலைக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக