மும்பை:மஹராஷ்ட்ரா மாநிலத்தில் நவநிர்மாண் சேனா என்ற பிரிவினைவாத கட்சியின் தலைவரான ராஜ் தாக்கரேயின் தொகுதியில் வங்காளதேசத்தைச் சார்ந்த வாக்காளர்களை அடையாளம் காட்டினால் அவருக்கு ரூ.2 கோடி பரிசு வழங்குவதாக சமாஜ்வாதி கட்சியின் தலைவர்களில் ஒருவரான அபூ ஹாஷிம் ஆஸ்மி சவால் விடுத்துள்ளார்.ராஜ் தாக்கரேயின் நவநிர்மாண் சேனா பிரிவினைவாத கட்சியினர் மும்பை ஆஸாத் மைதான வன்முறையை கண்டித்து
போலீசாரின் தடையை மீறி பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை நடத்தினர். இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ராஜ்தாக்கரே, தனது தொகுதியில் லட்சக்கணக்கான வங்கதேசத்தவர்கள் உள்ளதாக கூறினார்.
இதனைத் தொடர்ந்து நேற்று(புதன் கிழமை) செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர் அபூ ஹாஷிம் ஆஸ்மி கூறியது:
ராஜ் தாக்கரே தனது தொகுதியில் லட்சக்கணக்கான வங்கதேசத்தவர்கள் உள்ளதாக கூறியுள்ளார். அவர் மகாராஷ்டிர மக்களை முட்டாளக்க நினைக்கிறார்.
அவர் கூறியதைப் போல அவரது தொகுதியில் உள்ள வங்கதேச மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு லட்சம் பேரைக் காட்டட்டும். அவரால் இது முடிந்தது என்றால் அவருக்கு ரூ. 2 கோடி தருகிறேன் (அப்போது ரூ. 2 கோடிக்கான காசோலையை செய்தியாளர்களிடம் ஆஸ்மி காண்பித்தார்). அவர் என்னை வன்சொற்களால் திட்டியுள்ளார். அவரை நானும் அவ்வாறே திட்ட முடியும். ஆனால் நான் மேற்கொள்ளும் ஒழுங்கு அதற்கு அனுமதிக்கவில்லை. தனது தொகுதியில் வங்கதேசத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் இருப்பதாகக் கூறிய ராஜ் தாக்கரே தனது கூற்றை நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன். அவ்வாறு முடியவில்லையென்றால் அவர் அரசியலிலிருந்து விலக வேண்டும்.
தாக்கரே கட்சியினர் மும்பையில் தடையை மீறி செவ்வாய்க்கிழமை பேரணியில் ஈடுபட்டனர். இந்தப் பேரணிக்கு ஏற்பாடு செய்தவர்களை போலீஸார் தண்டிக்க வேண்டும்.
நேற்றைய பேரணியில் ராஜ் தாக்கரே வங்கதேசத்தவரின் பாஸ்போர்ட்டைக் காண்பித்து அதனை வீசி எறிந்தார். இது கடுமையான குற்றம். இதனைத் தீர விசாரிக்க வேண்டும்.
தாழ்த்தப்பட்ட மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிரானவர் ராஜ் தாக்கரே. அவருடைய ஹிந்துத்வா முகம் இப்போது வெளியே தெரிகிறது.
மும்பையில் ஆக்ஸ்ட் 11-ம் தேதி நடந்த கலவரத்தை மிகத் திறமையாக கையாண்டு அடக்கிய மும்பை காவல் துறை ஆணையர் அரூப் பட்நாயக்கை பாராட்டுகிறேன்.
மும்பையில் நடந்த கலவரத்துக்கு போதைப் பொருள் கும்பல்தான் காரணம் என்றும் ஆஸ்மி தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக