புதன், ஆகஸ்ட் 29, 2012

இறந்த குழந்தையை பெருச்சாளி கடித்த சம்பவம்: 2 டாக்டர்கள், நர்ஸ்களை சஸ்பெண்ட் செய்ய உத்தரவு !

 Chennai Baby Dies Incubator Family Alleges Rat Bite சென்னை: சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் என்ற துப்புறவுத் தொழிலாளியின் மனைவி மலருக்கு (25) பிரசவ வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து திருவல்லிக்கேணி கஸ்தூரி பாய் அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.கடந்த 15ம் தேதி சிசேரியன் ஆபரேஷன் மூலம் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. எடை குறைவாக (2.2 கிலோ) இருந்ததால் அந்தக் குழந்தையை இன்குபேட்டரில் வைத்து பராமரித்தனர். 12 நாட்களாக இன்குபேட்டரில்
இருந்த குழந்தை இறந்துவிட்டதாக ஞாயிற்றுக்கிழமை மருத்துவர்கள் தெரிவித்தனர்.
குழந்தை இறந்ததால் பெரும் துயரத்துடன் மருத்துவமனைக்கு உடலை வாங்க வந்த மலரின் குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
குழந்தையின் கன்னம், மூக்கு ஆகியவை குதறப்பட்டு இருந்தது. இதைப் பார்த்து உறவினர்கள் அதிர்ச்சியும், ஆவேசமும் அடைந்தனர்.
அதுபற்றி கேட்டபோது ஒரு நர்ஸ் பெருச்சாளியோ, பூனையோ கடித்திருக்கலாம் என்று சர்வ சதாரணமாக கூறிவிட்டுச் சென்றார்.

குழந்தையை பெருச்சாளி கடித்ததை அறிந்த பெற்றோரும், உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் 174-வது சட்ட பிரிவின் கீழ் குழந்தையின் மரணம் குறித்து வழக்குப் பதிவு செய்தனர்.

எலி கடித்து குழந்தை இறந்ததாக தந்தை ரஞ்சித் குமார் புகார் கூறினார். ஆனால் டாக்டர்கள் அதை மறுத்தனர். எடை குறைவு, மூச்சுத் திணறல், செப்டிசீமியா என்ற ரத்த நோய் உள்ளிட்ட காரணங்களால் குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மேலும் அலர்ஜி காரணமாக முகம் சுருங்கியிருக்கலாம் என்றும் கூறினர். ஆனால் இதை உறவினர்கள் ஏற்கவில்லை.
இந் நிலையில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜய் இன்று மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அவருடன் மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் வம்சதாரா, துணை இயக்குனர் டாக்டர் முத்துராஜ், மருத்துவ கல்லூரி டீன் கனகசபை, எம்.ஆர்.ஓ. ரமேஷ் ஆகியோரும் உடன் இருந்தனர்
குழந்தை வைக்கப்பட்டிருந்த இன்குபேட்டர் அறையையும், வார்டையும் அமைச்சர் சுற்றிப்பார்த்தார். பின்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் சம்பவம் நடந்த நேரத்தில் மருத்துவமனையில் பணியில் இருந்த டாக்டர்கள் ரமேஷ் மற்றும் பார்த்திபன் ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். அப்போது பணியில் இருந்த நர்சுகளையும் சஸ்பெண்டு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவ ஊழியர்கள் 5 பேருக்கு விளக்கம் கேட்டு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்:
இந் நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகி சடையன் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அதில், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் எலி மற்றும் பிற பூச்சிகளின் தொல்லையில் இருந்து நோயாளிகளைப் பாதுகாக்கவும், மருத்துவமனை வளாகங்களை சுத்தமாக வைத்திருக்கவும் தமிழக அரசுக்கு உயர் நீதின்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த மனு நாளை விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக