புதுடெல்லி:மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள எக்ஸ்-ரே இயந்திரத்தில் உள்ள கதிரியக்கப் பொருட்களை முறைப்படுத்துவதில் இருந்து – அணுமின் நிலையங்கள் வரை – அணு சக்தியோடு சம்மந்தப்பட்ட அனைத்து விவகாரங்களிலும் பாதுகாப்பை உறுதி செய்யவதற்காக உருவாக்கப்பட்ட அணு சக்தி ஒழுங்குமுறை ஆணையம் மத்திய அரசின் ஒரு கீழ்-அலுவலகம் போல செயல்படுவதாக தணிக்கை அறிக்கை
கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு விதிமுறைகளை இயற்றுவதற்கோ, அணு நிலையங்களை கண்காணிக்கவோ, தரக் கட்டுப்பாட்டை அமல்படுத்தவோ அதிகாரங்கள் ஏதும் அதற்கு இல்லை என்றும் இந்தியாவின் தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அணு சக்தி தொடர்புடைய விவகாரங்களை ஒழுங்கப்படுத்தக்கூடிய சுயாதீனமான, அதிகாரம் படைத்த கட்டமைப்பு பெரும் ஆபத்தை விளைவிக்கூடும் என்ற எச்சரிக்கையும் இந்த அறிக்கையில் விடப்பட்டுள்ளது. அணுக் கசிவு ஏற்பட்டால், கதிர் வீச்சின் அளவை அளவிடும் பொறுப்பு கூட ஒழுங்குமுறை ஆணையத்திடம் இல்லை என்றும் கதிரியக்கக் கழிவுகள் பாதுகாப்பான முறையில் அகற்றப்பட்டதா என்பதை உறுதி செய்யக் கூடிய சட்ட ரீதியான கட்டமைப்பு இல்லை என்றும் தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அணுப் பாதுகாப்பை உறுதி செய்ய அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் அதிகார வரம்புகளை உயர்த்த வேண்டும் என்றும் தணிக்கை அதிகாரி பரிந்துரை செய்துள்ளார். இந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள விடயங்கள் நியாயமாகவும் தமக்கு ஏற்படையதாகவும் இருப்பதாக கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் சு.ப.உதயகுமார் தெரிவித்தார்.
இந்தியாவில் அணு ஆராய்ச்சி என்பது அரசின் ஏகபோகமாக இருந்து வரும் நிலையில், ஒழுங்குமுறை ஆணையத்தில் இருப்பவர்கள் முன்னாள் அரச விஞ்ஞானிகளாக இருக்கின்றனர். இந்த நிலையை மாற்ற வெளிநாட்டு நிபுணர்களையும், அரசு சாரா பேராசிரியர்களையும் நியமிக்கலாம் என்றும் அவர் யோசனை தெரிவித்தார்.
மருத்துவமனையில் கதிரியக்கப் பொருட்களை உபயோகப்படுத்தப்படுவது அதிகரித்து வந்தாலும், நாட்டில் உள்ள எக்ஸ்-ரே நிலையங்களில் வெறும் 9 சதவீதம்தான் ஒழுங்குமுறை ஆணையத்திடம் பதிவு செய்யப்பட்டுள்ளன. டெல்லி பல்கலைக்கழகத்தில் இருந்த கோபால்ட்-60 என்ற கதிரியக்கப் பொருளைக் கொண்ட சாதனம் பழைய இரும்புக் கடைக்கு 2010 இல் போடப்பட்டது. அதைக் கையாண்ட ஒரு தொழிலாளி கதிர்வீச்சு தாக்குதலில் இறந்தார்.
கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ராஜஸ்தான் அணு மின் நிலையத்தில் இருந்து வெளியேறிய கதிரியக்கத்தால் 40 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக இருப்பவரும் இந்தியாவின் அணுமின் நிலையங்களை இயக்கும் அணு மின் கழகத்தின் தலைவராக இருப்பவரும் அணுசக்தித் துறைத் தலைவரின் கீழ்தான் பணியாற்றுகிறார்கள். இந்த முறையை மாற்றி ஒழுங்கு முறை ஆணையத்தை அணு சக்தித் துறைத் தலைவரிடமிருந்து பிரிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கைகள் விடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்த விமர்சனம் குறித்து கருத்து வெளியிட்ட அணு சக்திக் கழகத்தின் முன்னாள் தலைவர் எம் ஆர் சீனிவாசன், அணு சக்தி ஒழுங்குமுறை வாரியம் உருவாக்கப்பட்ட சமயத்தில், அணு விடயமாக நிபுணத்துவம் பெற்றவர்கள் அரசுக்கு வெளியே இல்லை என்று குறிப்பிட்டார். சக்தி மிக்க ஒழுங்குமுறை ஆணையத்தை அமைக்கும் சட்ட வரைவு நாடாளுமன்றத்தின் ஆய்வில் இருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.
அதேநேரம், முழு சுயாதீனமாக இல்லாவிட்டாலும் அணு சக்தி ஒழுங்குமுறை ஆணையம் பல பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைகளையும், ஆணைகளையும் கடந்த முப்பது ஆண்டுகளில் அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் உள்ள மிகப் பழமையான தாரபூர் அணு உலை 43 ஆண்டுகளாகத் தொடர்ந்து இயங்குகிறது என்று சுட்டிக் காட்டிய டாக்டர் சீனிவாசன், அணு உலைகளை பயன்பாட்டில் இருந்து நீக்குவது தொடர்பான பாதுகாப்பு நடைமுறைகள் தற்போது உருவாக்கப்பட்டு வருவதாகவும் இது குறித்த முழு விபரங்களை தெரிந்து கொள்ளாமல் சில கருத்துக்கள் தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக