வியாழன், ஆகஸ்ட் 30, 2012

ஈரான் தலைவர்களுடன் பிரதமர் மன்மோகன் சிங் பேச்சுவார்த்தை

PM Manmohan Singh meets Khameneiடெஹ்ரான்:அணிசேரா நாடுகள் இயக்கத்தின் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்கு சென்றுள்ள இந்திய பிரதமர் மன்மோகன்சிங், அங்கு ஈரானின் ஆன்மீக தலைவர் ஆயத்துல்லாஹ் அலி காம்னஈ, அதிபர் அஹ்மத் நஜாத் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில், இரு நாடுகள் இடையேயான விவகாரங்கள், மேற்காசியாவில் நிலவி வரும் நெருக்கடிகள்
குறித்து விவாதிக்கப்பட்டன.
முதலில் ஈரான் அதிபர் அஹ்மத் நஜாதுடன் பிரதமர் மன்மோகன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவருடன் இணைந்து ஈரானின் ஆன்மீக உயர் தலைவர் ஆயத்துல்லாஹ் அலி காம்னஈயை சந்தித்து பேசினார். அப்பொழுது காம்னஈ, மகாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு குறித்து நினைவுக் கூர்ந்தார்.
அணிசேரா நாடுகள் அமைப்புக்கு நேரு ஆற்றிய பங்கு பற்றி குறிப்பிட்ட காம்னஈ, 1981-ல் தாம் இந்தியா வந்ததையும் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்ததையும் குறிப்பிட்டார். இந்தப் பேச்சுவார்த்தை 40 நிமிடங்கள் நீடித்தன.
ஈரானிடமிருந்து இந்தியா பெட்ரோல் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்புத் தெரிவித்துவரும் நிலையில், ஈரானின் முக்கிய தலைவர்களை பிரதமர் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இரு தலைவர்களுடனான சந்திப்புகளின் போது விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எனினும், எண்ணெய்-எரிவாயு விநியோகம், சிரியா உள்ளிட்ட சர்வதேச மற்றும் இரு தரப்பு விவகாரங்கள் பேச்சுவார்த்தையில் இடம்பெற்றிருந்ததாக இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர். கோதுமை, டீ ஆகியவற்றை ஈரானுக்கு ஏற்றுமதி செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக