வியாழன், ஆகஸ்ட் 30, 2012

ஷஹீத் செய்யத் குதுப்-இஸ்லாமிய மீள் எழுச்சியின் உந்து சக்தி !

1966, ஆகஸ்ட்-29, 20 ஆம் நூற்றாண்டின் இஸ்லாமிய மீள் எழுச்சியின் உந்து சக்தியாகவும், அறிவுஜீவியாகவும் திகழ்ந்த செய்யத் குதுப், எகிப்திய அதிபர் ஜமால் அப்துல் நாஸரால் சிறைச்சாலையில் தூக்கிலடப்பட்ட கறுப்பு நாள். எழுத்தாளர், சிந்தனையாளர், இலக்கியவாதி, நூலாசிரியர், இஃவானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் அறிவுகளஞ்சியம் இவை எல்லாவற்றையும் விட ஃபீ ழிலாலில் குர்ஆன் என்ற பிரபல திருக்குர்ஆன் விரிவுரை நூலின் ஆசிரியர்
என்று உலகம் அறிந்த அங்கீகரித்த செய்யத் குதுப் தூக்கிலிடப்பட்டு நான்கரை தசாப்தங்கள் கழிந்த பிறகும் அந்த அறிவு ஜீவியின் எழுத்துக்களும்,  சிந்தனைகளும் குறித்து இன்றும் உலகில் சூடான விவாதங்களும்,  ஆய்வுகளும் நடந்து வருவதை காண்கிறோம்.
செய்யத் குதுபின் சிந்தனைகள் மற்றும் ஆய்வுகளில் மாற்றுக் கருத்துடையோர் கூட நவீன காலக்கட்டத்தின் இஸ்லாமிய எழுச்சியில் அந்த மகத்தான ஆளுமையின் அறிவும், சிந்தனைகளும் அளித்த நன்கொடைகளை மறுக்கவில்லை.
ஒரு காலக்கட்டத்தின் இதிகாசமாகவும், வியக்கத்தக்க வரலாற்றை உருவாக்கியவராகவும் வாழ்த்தப்பட்ட செய்யத் குதுபைப் போல புகழ்பெற்ற சிந்தனையாளரை அதற்கு பிறகு நைலின் மண் ஈன்றெடுக்கவில்லை எனலாம்.
இஃவானுல் முஸ்லிமீன் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட செய்யத் குதுப் அதன் தலைமைத்துவ குழுவில் முக்கிய நபராக கருதப்பட்டார். ‘ஃப்ரீ ஆஃபீஸர்ஸ் கிளப்’பில் இடம்பெற்றிருந்த ஒரே சிவிலியன் செய்யத் குதுப் ஆவார். பின்னர் ஜமால் அப்துல் நாஸர், இஃவானுல் முஸ்லிமீன் மற்றும் ஃப்ரீ  ஆபீஸர்ஸ் கிளப் இடையேயான இரகசிய உறவை தனது சொந்த ஆதாயத்திற்கு பயன்படுத்துகிறார் என்பதை புரிந்து கொண்டவுடன் அதில் இருந்து உடனடியாக விலகிவிட்டார்.
1954-ஆம் ஆண்டு அலெக்ஸாண்டிரியாவின் அருகில் உள்ள மின்ஷியாவில் எகிப்து அதிபரான ஜமால் அப்துல் நாஸரை கொலைச்செய்ய நடந்த முயற்சியில் இஃவானுல் முஸ்லிமீனுக்கு பங்கிருப்பதாக குற்றம் சாட்டி ஏராளமான இஃவான்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் செய்யத் குதுபும் இடம் பெற்றிருந்தார். 15 ஆண்டுகள் செய்யத் குதுபிற்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. 10 ஆண்டுகளை சிறையில் கழித்த செய்யத் குதுபை விடுவிக்க முன்னாள் ஈராக் அதிபர் அப்துல் ஸலாம் ஆரிஃப் நடத்திய முயற்சி பலன் கண்டது. எனினும், எட்டு மாதங்களுக்கு பிறகு பல குற்றங்களை சுமத்தி செய்யத் குதுப் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
வரலாற்றில் மிகக்கொடிய சித்திரவதைகளையும், கொடுமைகளையும் செய்யத் குதுப் உள்ளிட்ட இஃவான்கள் சிறையில் அனுபவித்தார்கள். போலீஸ் சூப்பிரண்ட் ஷம்ஸ் பத்ரானின் தலைமையில் அரங்கேற்றப்பட்ட கர்ண கொடூரமான சித்திரவதைகள் குறித்து ஸைனபுல் கஸ்ஸாலி தனது ‘அய்யாம் மின் ஹயாத்தி’(‘என் வாழ்வில் மறவா நினைவுகள்’ தமிழில் இந்நூல் வெளியானது) என்ற தனது சுயசரிதை நூலில் குறிப்பிடுகிறார்.
1965-ஆம் ஆண்டு ஜூலை 30-ஆம் தேதி, தனது சகோதரர் முஹம்மது குதுப் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து செய்யத் குதுப், மத்திய உளவுத்துறைக்கு எழுதிய கடிதம் மீண்டும் அவரது கைதுக்கு காரணமானது. இஃவானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் இதர ஏழு நபர்களுடன் செய்யத் குதுபையும் கைது செய்த எகிப்திய அரசு, விசாரணை நாடகத்தை அரங்கேற்றி அவருக்கு தூக்குத் தண்டனையை தீர்ப்பளித்தது.
1966-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29-ஆம் தேதி திங்கள் கிழமை காலை செய்யத் குதுப் தூக்கிலப்பட்டார்.
தூக்கிலிடப்பட்ட தினத்தில் செய்யத் குதுப் தூக்கு மேடையில் நிறுத்தப்பட்டிருந்த வேளையில் அவரிடம், ஷரீஅத் சட்டங்களை அமல்படுத்துவதற்கான கோரிக்கை மற்றும் அது தொடர்பான பணிகள் தவறு என்பதை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கோரினால் தூக்குத் தண்டனையில் இருந்து தப்பிக்கலாம் என ராணுவ அதிகாரிகள் கூறியபொழுது, அந்த வீர போராளி, மரணம் கண் முன்னால் நிழலாடிய அந்த வேளையிலும் உச்சக் குரலில் உறுதியுடன் இவ்வாறு கூறினார்: “அல்லாஹ்வின் பாதையில் பணியாற்றியதற்காக மன்னிப்பு கேட்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. தொழுகையின் போது அத்தஹியாத்தில்(இருப்பில்) அல்லாஹ்வின் ஏகத்துவத்தை எடுத்தியம்பும் இந்த சுட்டுவிரலால் அக்கிரமக்கார ஆட்சியாளனின் விருப்பத்தை ஆதரிக்கும் ஒரு எழுத்தைக்கூட எழுதமாட்டேன்”.
அதிபரிடம் ஒரு கருணை மனுவை சமர்ப்பிக்க கூடாதா? என அடுத்து ராணுவ அதிகாரிகள் கேள்வி எழுப்பிய பொழுது, உறுதி சற்றும் குலையாமல் உடனடியாக செய்யத் குதுப் இவ்வாறு பதில் அளித்தார்: “நான் ஏன் கருணைக்காக யாசிக்க வேண்டும்? உண்மையில் நான் இந்த தீர்ப்பிற்கு தகுதியானவன் என்றால் அதில் எனக்கு திருப்தியே!. போலி குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தால், ஒரு அசத்திய சட்ட அமைப்பில் கருணைக்காக மன்றாட நான் சிறுமையடைந்தவன் அல்லன்”.
செய்யது குதுபை தூக்கிலிடுவதற்கு முன்பாக கலிமா ஷஹாதத்தை சொல்லிக்கொடுக்க வந்த அதிகாரி, “ஷஹாதத் கலிமாவை சொல்லுங்கள்” என கூறியபொழுது, சற்றும் யோசிக்காமல் செய்யத் குதுப் அளித்த பதில், “இந்த நாடக காட்சியை பூர்த்திச்செய்ய நீங்களும் வந்துவிட்டீர்களா? சகோதரா! நீங்கள் நான் கூறுவதற்கு உபதேசித்த “லாயிலாஹ இல்லல்லாஹு” என்ற வார்த்தையின் காரணமாகவே நான் தூக்கிலிடப்படுகிறேன். அதே  “லாயிலாஹ இல்லல்லாஹ்” உங்களுடைய வாழ்வாதாரத்திற்கு பயன்படுகிறது”. என்று தெரிவித்தார்.
எகிப்தில் ஒரு காலக்கட்டத்தில் குரலாக திகழ்ந்த ஷேக் அப்துல் ஹமீத் கஸக் நினைவுக் கூறுகிறார்: தனது கை,கால்களை கட்ட முயன்ற சிறை வார்டனிடம் செய்யத் குதுப் கூறினார்: “அந்த கயிறை என்னிடம் தாருங்கள். எனது கை, கால்களை நானே கட்டிக்கொள்கிறேன். எனது இறைவனின் சுவர்க்கத்தில் இருந்து தப்பியோட நான் முயல்வேனா?”.
தூக்குக் கயிற்றை முத்தமிடும் வேளையில் செய்யத் குதுப் இறுதியாக கூறிய வார்த்தைகள், இறைத்தூதர் நூஹ் நபி(அலை) அவர்கள் இறுதியாக கூறிய அதே வார்த்தைகளாகும். “அப்போது அவர்(நூஹ்); “நிச்சயமாக நான் தோல்வியடைந்தவனாக இருக்கிறேன்; ஆகவே, நீ(எனக்கு) உதவி செய்வாயாக!” என்று அவர் தம் இறைவனிடம் பிரார்த்தித்தார்”(அல்குர்ஆன் 54:10).
தூக்குமேடை அமைக்கப்பட்டிருந்த அறையின் வெளியே கடைசி நிமிடங்கள். தூக்கிலிடப்பட வேண்டியவரின் பெயர் அழைக்கப்பட்டது.
பெயர்:செய்யத் குதுப் இப்ராஹீம்
வயது: 60
வேலை:முன்னாள் பேராசிரியர், பிரபல இஸ்லாமிய அறிஞர்
குற்றம்:அரசை கவிழ்க்க முயன்றார்.
செய்யத் குதுபை தூக்கிலிட பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட பணியாளர் அஷ்மாவியின் முகத்தில் தென்பட்ட உணர்ச்சி, துக்கத்தை வெளிப்படுத்தும் பெருமூச்சாக வெளியானது. தான் ஒரு இதயமுடைய மனிதன் என்று அஷ்மாவிக்கு முதன் முதலாக தோன்றிய நிமிடம். வழக்கம் போல தனது பணியை நிறைவேற்ற அஷ்மாவியால் இயலவில்லை. ஆனால், அதனை நிறைவேற்றியாக வேண்டிய நிர்பந்தம். இதற்கு முன்னர் செய்யது குதுபை நேரில் சந்திக்காவிட்டாலும், ஊர் மக்கள் மற்றும் நண்பர்கள் அளித்த தகவல்கள் மூலமாக செய்யத் குதுபின் முகம் மிகவும் அறிமுகமானது. அவர் எழுதிய நூற்களின் பெயர்கள் அஷ்மாவிக்கு தெரியும். இதயப்பூர்வமாக நேசித்தும், மதிக்கும் ஒரு நபரை சொந்த கரங்களால் தூக்கிலிட வேண்டிய துரதிர்ஷ்டவசமான சூழல் அஷ்மாவிக்கு உருவானது. செய்யது குதுபின் கண்களை நோக்கி கழுத்தில் கொலைக் கயிற்றை அணிவிக்க நேர்ந்த அஷ்மாவியின் தர்மசங்கடத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை.
அன்றைய தினம், செய்யத் குதுபுடன் இதர இரண்டு இஃவான் தலைவர்களையும் தூக்கிலிட வேண்டியிருந்தது. முஹம்மது யூசுஃப் ஹவாஷி, அப்துல் ஃபத்தாஹ் இஸ்மாயீல் ஆகியோர் அவர்.
செய்யத் குதுபை தூக்கிலிட அஷ்மாவிக்கு உதவியாக இருந்த 2 தூக்கிலிடும் பணியாளர்கள் பின்னர் தாங்கள் செய்த பணிக்காக தவ்பா செய்து மாபாதக ஆட்சியாளனின் கட்டளையை நிறைவேற்றிய அந்த உணர்ச்சிப்பெருக்கான நிமிடங்களை இவ்வாறு விவரித்தனர்: “நாங்கள் இறுதியாக தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட கைதியொருவருக்கு காவல் நிற்கும் பொறுப்பை ஏற்க வேண்டியிருந்தது. அவர் மிகவும் ஆபத்தானவர் என எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. “தீவிரவாதிகள் மற்றும் கிளர்ச்சியாளர்களின் மூளையும், தலைவரும் ஆவார்” என அவரைக் குறித்து கூறப்பட்டது. அவரது உடலில் கொடிய சித்திரவதைகளின் அடையாளங்கள் காணப்பட்டன. அவரது பெயர் செய்யத் குதுப். எழுந்து நிற்க கூட இயலாத அவரை சிறையில் இருந்து நீதிமன்றத்திற்கு நாங்கள் சுமந்து சென்றோம். ஒரு இரவில் தூக்குமேடையை தயார் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடைசியாக அறிவுரை வழங்கவும், பிரார்த்திக்கவும் ஷேக் ஒருவர் செய்யது குதுபிடம் அனுப்பப்பட்டார். மறு நாள் காலையில் நானும் எனது சக பணியாளரும் செய்யது குதுபை சுமந்து சென்று ராணுவ ஜீப்பில் அமரவைத்தோம். மரணத் தண்டனையை நிறைவேற்ற போகும் பயணம் அது. ஆயுதம் ஏந்திய ராணுவ வீரர்கள் அடங்கிய ஜீப், எங்களது வாகனத்தின் பின்னால் வந்தது. வாகனங்கள் குறிப்பிட்ட இடத்தை அடைந்தன. ராணுவ வீரர்கள் வாகனத்தில் இருந்து குதித்து இறங்கி அவர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்த இடங்களில் நின்றனர். ராணுவ தளபதிகள் ஏற்கனவே எல்லாவற்றையும் தயார் செய்து வைத்திருந்தனர். தூக்கு மேடைகள் தயார். ஒவ்வொருவரும் தங்களுக்கு அடையாளப்படுத்தப்பட்ட தூக்கு மேடைக்கு அனுப்பப்பட்டனர். தூக்குமேடையில் நிறுவப்பட்டிருந்த லிவரை அழுத்த உத்தரவை எதிர்நோக்கி தூக்கு தண்டனையை நிறைவேற்றும் முக்கிய பணியாளரான அஷ்மாவி நின்றுக்கொண்டிருந்தார். தூக்கு மேடையை நோக்கி செல்லும் பொழுது அவர்கள்(இஃவான்கள்) ஒவ்வொருவரும் தங்கள் சகோதரர்களை நோக்கி கூறிய வாழ்த்துச் செய்திகள் இன்றும் எங்களின் காதுகளில் ரிங்காரமிடுகின்றன.
“நல்தகீ ஃபீ ஜன்னாத்தில் குல்தி மாஅ முஹம்மதின் வ அஸ்ஹாபிஹி(முஹம்மது நபி(ஸல்) மற்றும் அவர்களது தோழர்களுடன் சுவனத்தில் சந்திப்போம்).  பின்னர் ஒரு ராணுவ அதிகாரி செய்யத் குதுபின் அருகில் சென்றார். அவருடைய கண்ணில் கட்டப்பட்டிருந்த துணியை அவிழ்க்குமாறு கட்டளையிட்டார். கழுத்தில் இருந்து தூக்குக் கயிறை அகற்றுமாறு உத்தரவிட்டார். தாழ்மையான குரலில் செய்யத் குதுபிடம், “கருணை மிக்கவரும், சகிப்புத்தன்மை மிக்கவருமான அதிபரிடமிருந்து ஒரு புதிய வாழ்க்கையை துவக்குவதற்கான அன்பளிப்புடன் உங்களிடம் வந்துள்ளேன். ஒரு வாசகத்தை எழுதி கையெழுத்திட்டால் போதும். உங்களை இப்பொழுதே விடுதலைச் செய்கிறோம். ‘எனக்கு தவறு நேர்ந்துவிட்டது. நான் மன்னிப்புக் கோருகிறேன்’ என்று மட்டும் எழுதினால் போதும்.
“அவ்வேளையில் செய்யத் குதுப், அந்த ராணுவ அதிகாரியின் முகத்தை நோக்கி புன்னகைத்த காட்சியை எங்களால் மறக்கவியலாது. ஒளிரும் கண்களுடன், புன்சிரியின் நிலா ஒளி சிதறும் முகபாவனையுடன் ஆச்சரியமான அமைதியுடன் செய்யத் குதுபின் திடமான குரல் இவ்வாறு ஒலித்தது: “ஒரு போதும் இல்லை!ஒருபோதும் மாய்ந்து போகாத ஒரு பொய்யான வாக்குமூலத்தை அளித்து அழிந்துபோகும் ஒரு வாழ்க்கையை பதிலாக பெற நான் தயாரில்லை”.
துக்கம் மேலிடும் குரலில் ராணுவ அதிகாரி கூறினார்: “செய்யத்! இனி மரணம்தான்!”. செய்யத் குதுபின் உறுதியான குரல் மீண்டும் ஒலித்தது: “யா மர்ஹபன் பில் மவ்தீ ஃபீ ஸபீலில்லாஹ்” (அல்லாஹ்வின் பாதையில் மரணத்தை வரவேற்கிறேன்) அதிகாரி அஷ்மாவிக்கு உத்தரவை பிறப்பித்தார். அவர் லிவரை அழுத்தினார். ஸய்யித் குதுப் மற்றும் அவரது தோழர்களின் உயிரற்ற உடல்கள் தூக்கு மரத்தில் தொங்கின. அந்த பரிசுத்த ஆன்மாக்கள் சுவனப் பூங்காவை நோக்கி, படைத்தவனை நோக்கி பயணித்தன”.
செய்யத் குதுப் எனும் தியாகத்தின் தடாகம், இவ்வுலகை விட்டு பிரிந்தாலும் அவரது சிந்தனைகள் இஸ்லாமிய இலட்சியவாதிகளுக்கு என்றும் உந்துசக்திதான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக