புதுடெல்லி:தவறான தீர்ப்புகள் மூலம் மரணத்தண்டனை விதிக்கப்பட்டவர்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கவேண்டும் என்று 14 முன்னாள் மற்றும் தற்பொழுது பதவி வகிக்கும் நீதிபதிகள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ளனர். உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.பி.சாவந்த், பல்வேறு உயர்நீதிமன்ற முதன்மை நீதிபதிகளான எ.பி.ஷா, பி.ஏ.கான்,
பிலால் நஸ்கி, பி.கே.மிஸ்ரா, எஸ்.என்.பார்கவா ஆகியோரும் முன்னாள் நீதிபதிகளும் இது தொடர்பாக குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
2003-ஆம் ஆண்டு நிகழ்ந்த கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மஹராஷ்ட்ராவைச் சார்ந்த அங்குஷ் என்ற தலித் சிறுவனுக்கு மஹராஷ்ட்ரா நீதிமன்றம் 2006-ஆம் ஆண்டு மரணத்தண்டனையை தீர்ப்பாக அளித்தது. 2009-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றமும் கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிச்செய்தது. ஆனால், குற்றம் புரியும் வேளையில் அங்குஷ் பருவ வயதை அடையவில்லை என்று குறிப்பிட்டு தாக்கல் செய்த மனுவில் மரணத்தண்டனை தீர்ப்பளித்தது தவறு என்பதை மஹராஷ்ட்ரா நீதிமன்றம் கண்டறிந்தது. ஆறு வாரத்திற்கு முன்புதான் இத்தீர்ப்பு வெளியானது. இந்த சூழலில்தான் தவறான தீர்ப்புகள் மூலம் மரணத்தண்டனை விதிக்கப்பட்டவர்களின் தண்டனையை ஆயுள்தண்டனையாக குறைக்குமாறு நீதிபதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அங்குஷ் தற்பொழுது நாக்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நாட்டின் பல்வேறு சிறைகளில் இத்தகைய நீதிமன்ற தவறான தீர்ப்புகள் மூலம் மரணத்தண்டனையை எதிர்பார்த்து 12 பேர் உள்ளனர். அதேவேளையில், நீதிமன்றம் தமது தவறை உணரும் முன்பே 2 பேருக்கு மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டது.
1996-ஆம் ஆண்டு ராமச்சந்திராவும், 1997-ஆம் ஆண்டு சுர்ஜா ராமையாவும் தூக்கிலிடப்பட்டனர். இரண்டு பேரின் மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டு மிகவும் காலதாமதமாக 2009-ஆம் ஆண்டுதான் இவர்கள் இருவர் உள்பட இதர 12 பேருக்கு மரணத்தண்டனை விதித்தது தவறு என்பதை உச்சநீதிமன்றம் கண்டறிந்தது.
1980-ஆம் ஆண்டு பச்சன் சிங்கிற்கு எதிரான பஞ்சாப் அரசின் வழக்கில் மரணத்தண்டனை தொடர்பாக வழிகாட்டுதல்களை உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்ச் வெளியிட்டது.
சந்தோஷ்குமாருக்கு எதிரான மஹராஷ்ட்ரா அரசின் வழக்கை விசாரிக்கும் பொழுது ராமச்சந்திரா வழக்கில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகள் தாம் கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஆறு வழக்குகளில் முன்மாதிரியாக கொள்ளப்பட்டது என்றும், தீர்ப்புகளில் தவறு ஏற்பட்டுள்ளதாகவும் உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டது. குற்றவாளியின் சூழலை உச்சநீதிமன்றம் பரிசீலிக்கவில்லை என்பதையும் நீதிமன்றம் கண்டறிந்தது.
தவறான தீர்ப்பு மூலம் 2 பேரின் உயிர் பறிக்கப்பட்டதும், 12 பேர் தண்டனை குறைக்கப்படாமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதும் பீதிவயப்படுத்துகிறது. இவர்களின் மரணத் தண்டனையை ஆயுள் தண்டனையாகவோ அல்லது குறைக்கவோ செய்யவேண்டும். இல்லையெனில் நாட்டின் நீதித்துறையின் வரலாற்றில் இது கரும்புள்ளியாக பதிவாகும் என்று நீதிபதிகள் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தவறாக தண்டிக்கப்பட்டவர்களின் மரணத்தண்டனையை நிறைவேற்றுவது நீதித்துறையை நெருக்கடியில் ஆழ்த்தும். இது ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்தின் அடிப்படை தத்துவங்கள் தொடர்பான விவகாரம் ஆகும் என்று கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக