செவ்வாய், மார்ச் 10, 2015

திமாபூர் சம்பவத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்! - நாகலாந்து முதல்வர் பதவி விலக கோரிக்கை!

திமாபூர் சம்பவத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்! - நாகலாந்து முதல்வர் பதவி விலக கோரிக்கை!
குவஹாத்தி: அஸ்ஸாமை சேர்ந்த வங்க மொழி பேசும் செய்யது ஷரீஃபுதீன் கான் என்பவரை நாகலாந்தின் திமாபூரில் கொடிய முறையில் கும்பல் ஒன்று படுகொலை செய்ததை பாப்புலர் ஃப்ரண்டின் வட கிழக்கு மாகாண தலைவர் முகம்மது காலித் ரஷாதி வன்மையாக கண்டித்துள்ளார்.
கற்பழிப்பு குற்றம் சுமத்தப்பட்டு திமாபூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த செய்யது ஷரீஃபுதீனை சிறையில் இருந்து 5000 பேர் கொண்ட கும்பல் அடித்து, நிர்வாணமாக இழுத்து சென்று கொலை செய்து தூக்கில் தொங்க விட்டதை கண்ட மாநில அரசாங்கம் எதுவும் செய்யாமல் இருந்தது அதிர்ச்சியாக உள்ளது.இப்பகுதியில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்திருப்பதற்கு இச்சம்பவம் மற்றுமொரு உதாரணம் என்பதை சுட்டிக்காட்டிய காலித், மாநிலத்தில் இராணுவம் நிலைபெற்று இருப்பதால் இச்சம்பவத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளே முதன்மை குற்றவாளிகள் என்றும் கூறினார்.
ஷரீஃபுதீன் கான் வங்கதேசத்தில் இருந்து வந்தவர் அல்ல. மாறாக, அவர் வங்க மொழி பேசும் இந்திய முஸ்லிம் என்பதும் அவரின் சகோதரர்கள் இராணுவத்தில் பணியாற்றி வருகிறார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. அவர் அஸ்ஸாமின் கரீம்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த ஒரு மதிப்புமிக்க தொழில் அதிபர் என்றும் கூறப்படுகிறது. அவருக்கு எதிரான வழக்கு போலியாக ஜோடிக்கப்பட்டது என்று அவர் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இப்பகுதியில் வகுப்புவாத, இனவாத செயல்திட்டங்களுடன் செயல்பட்டு வரும் பல்வேறு குழுக்கள், இனவாத வெறுப்பு மற்றும் சந்தேகங்களே இச்சம்பவத்திற்கு காரணமாக அமைந்துள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. வட கிழக்கு மாநிலங்களில் வாழும் முஸ்லிம்கள் இந்த பிரச்சாரத்திற்கு இரையாக்கப்படுகின்றனர். வங்க மொழி பேசும் ஒரு முஸ்லிமுக்கு எதிராக இந்த குற்றச்சாட்டு எழுப்பப்படும் போது, அவருக்கு எதிரான எந்த மனித தன்மையற்ற செயலுக்கும் நியாயம் கற்பிக்கப்படுகிறது. துரதிஷ்டவசமாக முன்னணி ஊடகங்களும் இதனையே கூறி வருகின்றனர்.
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை தொடர்ந்து நாகலாந்து முதல் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்றும் சம்பவத்தின் விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் காலித் கோரிக்கை வைத்துள்ளார். திமாபூர் மற்றும் நாகலாந்தின் பிற பகுதிகளில் உள்ள முஸ்லிம்களின் பாதுகாப்பிற்கு மத்திய அரசாங்கம் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக