புதன், மார்ச் 25, 2015

இந்தோனேசியாவில் இரு ஆஸ்திரேலியர்களின் கருணை மனுவை அதிபர் நிராகரித்த விவகாரம்: நீதிமன்றத்தில் அப்பீல்

இந்தோனேசியாவின் பாலி தீவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குள் போதைப்பொருள் கடத்த முயன்ற ஆண்ட்ரூ சான், மயூரன் சுகுமாரன் ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.


இந்த தண்டனை கடந்த பிப்ரவரி மாதத்திலேயே நிறைவேற்றப்படவிருந்த நிலையில், சர்வதேச அழுத்தங்கள் காரணமாக தண்டனையை நிறைவேற்றுவது ஒத்திவைக்கப்பட்டது.
சில தொழில்நுட்பக் காரணங்களால் தண்டனை மூன்று வாரத்திலிருந்து ஒரு மாதம் வரை ஒத்தி வைக்கப்பட்டதாக இந்தோனேசிய துணை அதிபர் யுசுப் கல்லாவின் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இருவரது கருணை மனுவையும் அந்நாட்டின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோகோ விடோடே, கடந்த மாதத்தில் நிராகரித்தார். இதையடுத்து ஜகார்தா மாநில நிர்வாக நீதிமன்றத்தில் அதிபரின் முடிவுக்கு எதிராக இருவரின் சார்பாக வழக்கறிஞர்கள் வழக்கு தொடுத்தனர். புனர்வாழ்வு கேட்ட இருவரின் மனுக்களையும் அதிபர் முறையாக பரிசீலிக்கவில்லை என்று அவர்கள் குற்றஞ்சாட்டினர். ஆனால் நீதிமன்றமோ கருணை மனுவை ஏற்பதும், நிராகரிப்பதும் அதிபரின் தனிப்பட்ட உரிமை என்று தெரிவித்தது.

இந்நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் லியோனார்ட் அரிடோனாங், அதிபரின் தனிப்பட்ட உரிமை குறித்து பல்வேறு ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். மேலும் வரும் திங்களன்று வல்லுனர் ஒருவரை சாட்சியாகவும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.

இருவரையும் மரண தண்டனையிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று ஆஸ்திரேலிய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்த விவகாரத்தால் இந்தோனேசியா-ஆஸ்திரேலியா இடையேயான உறவு மோசமடைந்தது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக