வெள்ளி, மார்ச் 27, 2015

காங்கிரஸ் உட்கட்சி தேர்தல் தேதி அறிவிப்பு

காங்கிரஸ் உட்கட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் செப்டம்பர் 30–ந் தேதி நடைபெறும் அகில இந்திய தலைவர் தேர்தலில் ராகுல்காந்தி தேர்வுபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.பழம்பெரும் கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி அதிக வருடங்களாக இருந்து வருகிறார். இவர் 1998–ம் ஆண்டு முதல் தொடர்ந்து 17 வருடங்கள் தலைவராக இருந்து சாதனை படைத்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியை அடுத்து காங்கிரஸ் தலைவர் பதவியை துணைத்தலைவரான ராகுல் காந்தியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் உள்பட அனைத்து பதவிகளுக்கான உட்கட்சி தேர்தலை கட்சி மேலிடம் அறிவித்துள்ளது.

தேர்தல் தேதி விவரங்களை டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜனார்த்தன் திவிவேதி அறிவித்தார்.

அகில இந்திய அளவில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக ஜூலை 16–ந் தேதி முதல் ஜூலை 31–ந் தேதி வரை கேரளா உள்பட 18 மாநிலங்களிலும், 2–வது கட்டத்தில் ஜூலை 28–ந் தேதி முதல் செப்டம்பர் 30–ந் தேதி வரை தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம் உள்பட எஞ்சிய மாநிலங்களிலும் இந்த தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாட்டை உள்ளடக்கிய 2–வது கட்டத்தில் நடைபெறும் தேர்தல் விவரம் வருமாறு:–

காங்கிரஸ் அமைப்பு தேர்தலின் ஆரம்பமாக உறுப்பினர்கள் சேர்க்கும் பணிகள் மே மாதம் 15–ந் தேதி முடிகிறது. முதலாவதாக ஜூலை 28–ந் தேதி முதல் ஆகஸ்டு 14–ந் தேதி வரை வட்டார உறுப்பினர்கள் தேர்தல் நடைபெறும்.

இரண்டாவதாக ஆகஸ்டு 20–ந் தேதி முதல் 31–ந் தேதி வரை வட்டார காங்கிரஸ் தலைவர், துணைத்தலைவர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள், 6 மாவட்ட குழு உறுப்பினர்கள், ஒரு மாநில குழு உறுப்பினர் தேர்தல் நடைபெறும்.

மூன்றாவதாக செப்டம்பர் 1–ந் தேதி முதல் 15–ந் தேதி வரை மாவட்ட தலைவர், துணைத்தலைவர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் தேர்தல் நடைபெறும்.

நான்காவதாக செப்டம்பர் 21–ந் தேதி முதல் 30–ந் தேதி வரை மாநில தலைவர், துணைத்தலைவர், பொருளாளர், மாநில பிரதிநிதிகள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் தேர்தலும், அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலும் நடைபெறும்.

இறுதிக்கட்டமாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முழுமையான கூட்டத்தில், காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த கூட்ட தேதி பின்னர் முடிவு செய்யப்படும். செப்டம்பர் 30–ந் தேதி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ராகுல்காந்தி இதில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.
காங்கிரஸ் கட்சியில் இளைஞர்களுக்கும் இடம் அளிக்கப்படும் என்று கட்சியின் மத்திய தேர்தல் ஆணைய தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக