திங்கள், மார்ச் 16, 2015

சீன பகுதியில் மீண்டும் குண்டு விழுந்தால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என மியான்மருக்கு சீனா எச்சரிக்கை


மியான்மர் நாட்டில், சீன எல்லைப்பகுதியில் ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு எதிராக மியான்மர் படைகள் அவ்வப்போது வான்தாக்குதல்கள் நடத்தி வருகின்றன.இந்த நிலையில், சில தினங்களுக்கு முன் மியான்மர் விமானம் போட்ட ஒரு குண்டு, சீனப்பகுதியில் விழுந்து, அதில் 4 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. இது இரு நாடுகள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.


ஆனால் தங்கள் நாட்டு விமானத்தில் இருந்து சீன பகுதியில் குண்டு விழவில்லை என மியான்மர் மறுத்தது.மியான்மருக்கும், சீனாவுக்கும் இடையே பனிப்போர் மூள வேண்டும் என்ற எண்ணத்தில், கிளர்ச்சியாளர்கள்தான் இந்த குண்டை போட்டிருக்க வேண்டும் என்று மியான்மர் கூறுகிறது. ஆனால் கிளர்ச்சியாளர்களிடம் விமானம் கிடையாது என கூறப்படுகிறது. இது தொடர்பாக பேசி, நேரில் எதிர்ப்பை பதிவு செய்வதற்கு மியான்மர் தூதரை சீனா அழைத்துள்ளது.

மியான்மர் விமானங்கள் பல முறை எல்லை தாண்டி வந்துள்ளதாகவும் சீனா குற்றம் சாட்டுகிறது.சீன மத்திய ராணுவ ஆணையத்தின் துணைத்தலைவர் பான் சாங்லாங் இது பற்றி கூறும்போது, ‘‘இந்த விவகாரம் எத்தனை தீவிரமானது என்பதை முதலில் மியான்மர் புரிந்துகொள்ள வேண்டும். இதை மிகுந்த கவனமுடன் அந்த நாடு கையாள வேண்டும். இதற்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும். மன்னிப்பு கேட்க வேண்டும். பலியானவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். நடந்தது என்ன என்பது குறித்து சீனாவிடம் விளக்க வேண்டும்’’ என வலியுறுத்தினார்.

மேலும், ‘‘இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று மியான்மர் தனது படையினரை அழைத்து கண்டிக்க வேண்டும். இல்லாவிட்டால், சீன மக்களின் உயிர்களையும், உடமைகளையும் பாதுகாத்துக்கொள்வதற்கு தேவையான உறுதியான நடவடிக்கையை சீன ராணுவம் மேற்கொள்ள நேரிடும்’’ எனவும் எச்சரித்தார்.
இந்த நிலையில், மியான்மர் குண்டு விழுந்த சம்பவத்தை தொடர்ந்து சீனா தனது எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தி வருகிறது. எல்லையில் பாதுகாப்பு, கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதற்காக சீனா தனது விமானத்தை அனுப்பி உள்ளது.

இந்த பிரச்சினை குறித்து சீன பிரதமர் லீ கெகியாங் நேற்று கருத்து தெரிவிக்கையில், ‘‘சீன மியான்மர் எல்லையில் ஸ்திரத்தன்மையை காக்கிற பொறுப்பும், வலிமையும் எங்களுக்கு உண்டு. எங்கள் மக்களின் உயிர்களையும், சொத்துக்களையும் உறுதியாக காப்போம்’’ என கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக