உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு தென் ஆப்பிரிக்க அணி முன்னேறியது.
சிட்னி மைதானத்தில் இன்று நடைபெற்ற முதல் காலிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா-இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இலங்கை அணிக்கு தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி அளித்தனர். 4 ரன்களுக்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்ததால், அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் நிதானமாக ஆடினர். எனினும், சங்கக்காரா (45), திரிமன்னே (42) ஆகியோர் தவிர மற்ற வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர்.
36.2 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழை பெய்ததால் சிறிது நேரம் ஆட்டம் பாதிக்கப்பட்டது. மழை நின்றபிறகு மீண்டும் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 37.2 ஓவர்களில் 133 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் இம்ரான் தாகிர் 4 விக்கெட்டுகளும், டுமினி 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதையடுத்து 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் துவக்க வீரர் அம்லா 16 ரன்களில் ஆட்டமிழந்தபோதும், அடுத்து இணைந்த டி காக்-டுபிளசிஸ் ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 18 ஓவர்களில் இலக்கை எட்டினர். இதனால், 9 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. டி காக் 57 பந்துகளில் 12 பவுண்டரியுடன் 78 ரன்களும், டுபிளசிஸ் 31 பந்துகளில் 21 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இதன் மூலம் உலகக் கோப்பை நாக் அவுட் சுற்றில் தென் ஆப்பிரிக்கா முதல் முறையாக வெற்றி பெற்றுள்ளது. 4 விக்கெட்டுகளை வீழ்த்திய இம்ரான் தாகிர் ஆட்டநாயன் விருது பெற்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக