திங்கள், மார்ச் 23, 2015

பிரதமர் மோடி தான் விவசாயிகளை தவறான பாதையில் வழிநடத்துகிறார்: அன்னா ஹசாரே பரபரப்பு குற்றச்சாட்டு

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் பிரதமர் மோடி தான், விவசாயிகளை தவறான பாதையில் வழிநடத்துகிறார் என்று அன்னா ஹசாரே குற்றம்சாட்டியுள்ளார். 

மனதோடு பேசுகிறேன் என்ற ரேடியோ நிகழ்ச்சியில் நேற்று பேசிய பிரதமர் மோடி, எதிர்கட்சிகள் விவசாயிகளை தவறான பாதையில் வழி நடத்துகின்றன என்று குற்றம் சாட்டியிருந்தார். அவரது கருத்துக்கு பதிலளிக்கும் வகையில், பஞ்சாபில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய அன்னா ஹசாரே 'நிலம் கையகப்படுத்தும் சட்டம்' தான் மக்களை தவறாக வழி நடத்தும் வகையில் உள்ளது என்றார். 

"மோடி சொல்வது போல இச்சட்டம் விவசாயிகளுக்கு உதவி செய்வதற்காக கொண்டு வரப்படவில்லை. மாறாக பெரு நிறுவனங்களுக்கு உதவி செய்வதற்காகவே கொண்டு வரப்பட்டுள்ளது. 2013-ல் காங்கிரஸ் அரசு முன்வைத்த நிலம் கையகப்படுத்தும் சட்டம் தவறானது என்று தற்போது மோடி கூறுகிறார். அப்படியானால் ஏன் நாடாளுமன்றத்தில் அதை எதிர்க்கவில்லை. விவசாயிகளுக்கு ஏதேனும் உதவி செய்யவேண்டுமென்று நினைத்தால் நாடு முழுவதும் ஆய்வு மேற்கொண்டு விவசாயத்திற்கு பயன்படாத நிலங்களை கண்டறிந்து அதை பெருநிறுவனங்களுக்கு கொடுங்கள். இப்பிரச்சனையில் ஆதரவு தரும்படி கேட்டு, 35 எதிர்கட்சிகளுக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன்" எனவும் அன்னா தெரிவித்தார். 

மேலும் நிலம் கையகப்படுத்தும் சட்டத்திற்கு எதிரான காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி நடத்தும் போராட்டம் வெறும் அரசியல் நோக்கம் கொண்டது எனவும் அன்னா குற்றம் சாட்டியுள்ளார். நான் போராட்டம் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மிரட்டல்கள் வருகின்றன. ஆனால் அதற்கெல்லாம் பயந்துகொண்டு போராட்டத்தை நிறுத்தப்போவது இல்லை என்று அன்னா ஹசாரே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக