செவ்வாய், மார்ச் 03, 2015

கடல் ஆராய்ச்சிக்கான செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-27 ராக்கெட் 9-ந் தேதி விண்ணில் ஏவப்படுகிறது

கடல் ஆராய்ச்சிக்கான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1டி என்ற செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-27 ராக்கெட் வரும் 9-ந் தேதி விண்ணில் ஏவப்படுகிறது. 

இதுகுறித்து ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர் எம்.ஒய்.எஸ்.பிரசாத் கூறியதாவது:- 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயற்கை கோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்கான பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. ஆகிய இருவகை ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது. தொடர்ந்து கடல்சார் ஆராய்ச்சிக்காக 7 செயற்கை கோள்களை விண்வெளிக்கு அனுப்ப முடிவு செய்தது. அதன்படி ஏற்கனவே 3 செயற்கை கோள்கள் அனுப்பப்பட்டுவிட்டன. கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஏ, கடந்த ஆண்டு ஏப்ரல் 4-ந் தேதி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1பி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 16-ந் தேதி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1சி செயற்கைகோள்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்து பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து அனுப்பியது. 

தொடர்ந்து 4-வது செயற்கை கோளான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1டி பி.எஸ்.எல்.வி. சி-27 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வரும் 9-ந் தேதி மாலை 6.35 மணிக்கு விண்ணுக்கு ஏவப்படுகிறது. இந்த செயற்கைகோளின் ஆயுட்காலம் 10 வருடமாகும். 

இதற்கான, இறுதிகட்ட ஆயத்த பணிகள் நடந்து வருகிறது. செயற்கைகோளை சுற்றி வெப்பத்தகடு இன்று (செவ்வாய்கிழமை) பொருத்தப்படுகிறது. ராக்கெட்டை செலுத்துவதற்கான 59 மணி நேர “கவுண்ட்டவுன்” 7-ந் தேதி காலை 7.35 மணிக்கு தொடங்க இருக்கிறது. 

இயற்கை சீற்றம், இயற்கை இடர் மேலாண்மை, கடல்சார் கண்காணிப்பு ஆகிய ஆய்வுக்காக இந்த செயற்கை கோள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் அனுப்பப்படுகிறது. 1,500 கிலோ மீட்டர் சுற்றளவு பரப்பளவு கடல் வழிகளையும், கடல் எல்லைகளையும் துல்லியமாக கண்காணிக்க முடியும். தரையிலும், வான்வெளியிலும் செல்லும் அனைத்து வாகனங்களையும் கண்காணிக்க முடியும். 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனராக ஏ.எஸ்.கிரண்குமார் கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக விண்ணில் ஏவப்படும் இந்த பி.எஸ்.எல்.வி. சி-27 ராக்கெட் 4 நிலைகளை கொண்டது. 

இந்த ராக்கெட்டின் முதல் நிலையில் திட எரிபொருளும், 2-ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பப்பட்டு வருகிறது. 44.4 மீட்டர் உயரம் கொண்ட பி.எஸ்.எல்.வி. சி-27 ராக்கெட்டின் எடை 320 டன் ஆகும். 

செயற்கைகோள் 1,425 கிலோ எடை கொண்டது. மீதம் உள்ள 3 செயற்கை கோள்களையும் இந்த ஆண்டு இறுதிக்குள் விண்ணில் அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இஸ்ரோ ஏவிய 28 பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளில், 27 ராக்கெட்டுகள் வெற்றிகரமாக விண்ணில் சென்றுள்ளது. முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் உதவியுடன் பி.எஸ்.எல்.வி. சி-27 ராக்கெட்டை வெற்றிகரமாக செலுத்துவதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. 

இவ்வாறு அவர் கூறினார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக