காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் ஜனநாயக கட்சியும், பாரதீய ஜனதா கட்சியும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளன. மக்கள் ஜனநாயக கட்சியின் நிறுவனர் முப்திமுகமது சயீத் நேற்று முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார்.
இந்த கூட்டணியை காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, தேசிய மாநாட்டு கட்சி ஆகியவை விமர்சனம் செய்துள்ளன. டெல்லி மேல்சபை காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத், இந்த கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளும் நாக்பூரில் (ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் அமைந்துள்ள இடம்) தான் எடுக்கப்படுகிறது என்று ஏற்கனவே கூறியிருந்தார். முதல்-மந்திரி பதவி ஏற்புக்கு பின்னர் குலாம்நபி ஆசாத் கூறியதாவது:-
இது பதவி ஏற்பு விழா என்பதைவிட, பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் ஜம்முவில் நடந்தது போல இருந்தது. பாரதீய ஜனதா கட்சி இப்போது மதமாற்றம் செய்துவரும் காலகட்டத்தில் இருக்கிறது. எனவே மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையென்றால், மக்கள் ஜனநாயக கட்சியில் இருந்து பா.ஜனதா கட்சிக்கு அரசியல் மாற்றம் நடந்துவிடும்.
இவ்வாறு குலாம்நபி ஆசாத் கூறினார்.
அந்த மாநிலத்தின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவரும், ஒரே கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.வுமான முகமதுயூசுப் தாரிகாமி கூறியதாவது:-
மக்கள் ஜனநாயக கட்சி-பா.ஜனதா கூட்டணி முரண்பாடுகளின் கூட்டணி. இந்த இரு கட்சிகளும் எதையோ மறைக்கிறது. குறைந்தபட்ச செயல்திட்டம் குறித்து மக்களிடம் கருத்து கேட்கப்படும் என்று மக்கள் ஜனநாயக கட்சி கூறியிருந்தது. ஆனால் அதனை அவர்கள் வெளியிடவில்லை.
எனவே பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக அவர்கள் என்ன உடன்பாடு செய்துகொண்டார்கள் என்பது மக்களுக்கு தெரியாது. இதில் இருந்து இரு கட்சிகளும் ஆட்சி அதிகாரத்தை பங்கு போடவே கைகோர்த்துள்ளது தெளிவாக தெரிகிறது. இப்போதைக்கு இரு கட்சிகளும் முரண்பாடுகளை சமாளித்து வந்தாலும், 2 மாதங்கள் சென்றால் இந்த கூட்டணியில் உள்ள பிரச்சினைகள் வெளிவரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக