சனி, மார்ச் 14, 2015

கொலை மிரட்டல் குற்றச்சாட்டு குறித்து டிராபிக் ராமசாமி விளக்கம்

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி (82). கொலை மிரட்டல் விடுத்ததாக வேப்பேரியை சேர்ந்த வீரமணி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார்.புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த டிராபிக் ராமசாமிக்கு ஜெயிலில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக ஜெயில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

அங்கிருந்து மயங்கிய நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அதி தீவிர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். உடல் நிலை தேறியதும் அவரை கைதிகள் வார்டில் சேர்த்தனர்.

அங்கிருந்த டிராபிக் ராமசாமி அடிவயிறு வலி மற்றும் சிறுநீர் கழிக்க முடியவில்லை என்று தெரிவித்தார். உடனே அவரை மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவுக்கு டாக்டர்கள் மாற்றினார்கள். அவரது உடல் நிலையை பரிசோதித்தனர். குறைந்த அளவே தண்ணீர் குடித்தது மற்றும் தனது நடவடிக்கையில் ஓய்வு இல்லாமல் இருந்தது போன்ற காரணங்களால் மயக்கம் ஏற்பட்டு இருக்கலாம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இருந்தாலும் வேறு ஏதேனும் பிரச்சினைகள் உள்ளதா என்று உடல் நிலையை தீவிரமாக பரிசீலித்து வருகிறோம் என்றனர்.

இதற்கிடையே டிராபிக் ராமசாமி கைது செய்யப்பட்டது பற்றி வக்கீல் ரவிக்குமார் என்பவர் தாக்கல் செய்த வழக்கு ஐகோர்ட்டு நீதிபதி சிவஞானம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ‘‘டிராபிக் ராமசாமி வயதானவர். அதிகாலையில் அவரது வீட்டுக்குள் நுழைந்து கைது செய்தது ஏன்? அவர் என்ன கிரிமினலா? முதல் நாள் மதியமே வழக்குப்பதிவு செய்து விட்டு அதிகாலையில் சென்று அவரை கைது செய்ய என்ன அவசியம் ஏற்பட்டது? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

அவரை உடனடியாக அரசினர் தோட்டத்தில் உள்ள பன்நோக்கு ஆஸ்பத்திரியில் பொது மக்கள் அனுமதிக்கப்பட்டிருக்கும் பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.
மேலும் டிராபிக் ராமசாமியை கைது செய்த நடவடிக்கை நியாயமற்றது என்பதற்கான முகாந்திரம் உள்ளது. எனவே இந்த மனு குறித்து வேப்பேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்ய சென்ற போலீஸ் அதிகாரிகள் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் டிராபிக் ராமசாமி நடந்த சம்பவம் பற்றி கூறியதாவது:–

பொய்யான குற்றச்சாட்டுகள் மூலம் என்னை கைது செய்துள்ளனர். கடந்த புதன்கிழமை புரசைவாக்கம் அழகப்பா ரோட்டில் பேனர்களை அகற்றினேன்.
அப்போது அடையாளம் தெரியாத சிலர் வந்து என்னிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். பேனர்களை அகற்றுவதை நிறுத்தும்படி சத்தம் போட்டார்கள்.இந்த வாக்குவாதத்தின் போது அந்த கூட்டத்தில் இருந்த ஒருவர் எனது முகத்தில் குத்தினார். பின்னர் பிரச்சினை சுமூகமாகி எல்லோரும் சென்று விட்டோம்.

அதிகாலையில் திருவல்லிக்கேணியில் நான் தங்கியிருந்த லாட்ஜில் வந்து போலீசார் என்னை கைது செய்தனர்.பின்னர் ஊடகங்கள் மூலம் தான் வீரமணி என்பவர் என் மீது புகார் கொடுத்து இருப்பதாக அறிந்தேன். நான் பத்திரிகைகளுக்கு ரோட்டில் நின்று பேட்டி கொடுத்து கொண்டிருந்ததாகவும் அப்போது அவரது வாகனத்தை தடுத்ததாகவும், மிரட்டியதாகவும், தெரிவித்துள்ளனர். அப்படி எதுவும் நடக்கவில்லை. நான் போக்குவரத்துக்கு இடையூறாகவும் நிற்கவில்லை என்பதற்கான வீடியோ ஆதாரங்கள் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து டிராபிக் ராமசாமி உடனடியாக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து அரசினர் தோட்டத்தில் உள்ள பன்நோக்கு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக