வியாழன், மார்ச் 19, 2015

அரசை விமர்சிப்பவர்கள் மீது தேசத்துரோக குற்றம் சுமத்த முடியாது!-மும்பை உயர்நீதிமன்றம்

ஆட்சியாளர்களை கார்ட்டூன், கேலிச்சித்திரங்கள் மூலம் விமர்சித்த காரணத்தால் ஒருவர் மீது தேசத்துரோக குற்றம் சுமத்த முடியாது என்று மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.இத்தகைய கேலிகள் வன்முறைகளை தூண்டவோ, சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை உருவாக்கவோ செய்யாவிட்டால் தேசத்துரோக குற்றம் சுமத்த முடியாது என்று தலைமை நீதிபதி மொஹித் ஸென், நீதிபதி ஜி.எஸ்.குல்கர்ணி ஆகியோரடங்கிய பெஞ்ச் தெரிவித்தது.

வழக்கறிஞரான சங்கர் மராத்தா சமர்ப்பித்த பொது நல மனுவின் மீதான விசாரணையில் நீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்தது.தேசிய சின்னம் மற்றும் பாராளுமன்றத்தை கேலிச் செய்து கார்ட்டூன் வரைந்தார் என்று குற்றம் சுமத்தி 2012-ஆம் ஆண்டு கார்டூனிஸ்ட் அஸிம் திரிவேதி மீது தேசத்துரோக குற்றம் சுமத்தப்பட்டு கைதுச் செய்யப்பட்டார்.இதற்கு எதிராக பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.அரசு இயந்திரத்தை விமர்சிக்கவும், எழுதவும் குடிமக்களுக்கு உரிமை உண்டு என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
அஸிம் திரிவேதியின் கார்ட்டூன்களை ஆய்வுச் செய்த பிறகே நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது.திரிவேதியின் கார்ட்டூன்களில் கேலி இல்லை, மாறாக கோபமே வெளிப்படுகிறது.கார்ட்டூன்கள் வன்முறைக்கு காரணமாக அமையவில்லை என்பதால் தேசத்துரோக குற்றம் சுமத்த முடியாது என்று நீதிபதிகளின் அமர்வு தெளிவுப்படுத்தியது.
அன்னா ஹஸாரேயின் ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் பங்கேற்ற அஸிம் திரிவேதியின் கைது சம்பவம் அன்று கடும் எதிர்ப்பை கிளப்பியிருந்தது.அவர் மீது சுமத்தப்பட்ட தேசத்துரோக குற்றத்தை அரசு பின்னர் வாபஸ் பெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக