வியாழன், மார்ச் 12, 2015

புதுவை முன்னாள் அமைச்சர் ரேணுகா அப்பாதுரை மரணம்

புதுவை முன்னாள் கல்வி அமைச்சர் ரேணுகா அப்பாதுரை. ரெட்டியார்பாளையத்தில் வசித்து வந்த இவருக்கு நேற்று இரவு திடீர் உடல்நிலை குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை 7.30 மணியளவில் ரேணுகா அப்பாதுரை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 75.

கடந்த 1980–ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ரெட்டியார்பாளையம் தொகுதியில் ரேணுகா அப்பாதுரை காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது அமைந்த தி.மு.க.–காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் எம்.டி.ஆர். ராமச்சந்திரன் தலைமையிலான அமைச்சரவையில் ரேணுகா அப்பாதுரை கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தார். அதன் பின்னர் காங்கிரசில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தார். தி.மு.க.வில் சுமார் 5 ஆண்டு காலம் துணை அமைப்பாளராக பதவி வகித்து வந்தார்.

இதன் பின்னர் கடந்த 2006–ம் ஆண்டு புதுவையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் புதுவை நகராட்சி தலைவர் பதவிக்கு அப்போதைய கண்ணன் கட்சியான புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.பெண்கள் நலனில் அக்கறை கொண்ட ரேணுகா அப்பாதுரை மகளிர் சமூகநல ஆலோசனை வாரிய தலைவர் பதவி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகியாகவும் இருந்து வந்தார்.

கல்வி அமைச்சராவதற்கு முன்பு இவர் தாகூர் அரசு கலை கல்லூரி மற்றும் பாரதிதாசன் பெண்கள் அரசு கல்லூரி ஆகியவற்றில் பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரேணுகா அப்பாதுரைக்கு கார்த்திக் என்ற மகன் உள்ளார்.

ரேணுகா அப்பாதுரையின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ரெட்டியார்பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு இறுதி சடங்கு நடக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக