குடியாத்தம் பாண்டி நகர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார். அதே பகுதியில் ஆஞ்சநேயர் கோவிலில் குருக்களாக உள்ளார். இவரது வீட்டின் எதிரே உள்ள இந்திராகாந்தி அரசு நிதியுதவி தொடக்க பள்ளியில் டவுன் பிச்சனூர் காளிம்மன்பட்டினம் சேர்ந்தவர் ராஜா என்பவரது 5 வயது மகள் ராஜேஸ்வரி 1–ம் வகுப்பு படித்து வந்தாள்.
கடந்த 2011–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19–ந் தேதி பள்ளிக்கு சென்ற ராஜேஸ்வரி பின்னர் வீடு திரும்பவில்லை.
3 நாட்களுக்கு பிறகு அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் ராஜேஸ்வரி பிணமாக மிதந்தாள். போலீஸ் விசாரணையில் ராஜேஸ்வரியை கோவில் குருக்கள் குமார் சாக்லேட் கொடுத்து கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்தினார். பின்னர் சிறுமி வீட்டில் பெரியவர்களிடம் கூறிவிடுவாள் என பயந்து கொலை செய்து பிணத்தை கிணற்றில் வீசியது தெரியவந்தது. போலீசார் இந்த குமாரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கு வேலூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நசீர்அகமது நேற்று தீர்ப்பு கூறினார்.
அதில் சிறுமியை கடத்தியதற்காக 10 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதமும், கொலை குற்றத்துக்காக 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், கொலையை மறைத்த குற்றத்துக்காக 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும் விதித்து, இந்த தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்கும்படி தீர்ப்பு கூறினார். இதன்படி குற்றவாளி குமாருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து குமாரை போலீசார் மீண்டும் வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக