புதன், மார்ச் 18, 2015

மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதாவை எதிர்த்து 9 மாவட்ட விவசாயிகள் மாநாடு

மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிலம் கையகப்படுத்தும் திருத்த மசோதாவை எதிர்த்து 9 மாவட்ட விவசாயிகள் மாநாடு தஞ்சையில் வருகிற 23–ந் தேதி நடக்கிறது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலானது) பொதுசெயலாளர் பெ.சண்முகம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலான) டாக்டர் வே.துரைமாணிக்கம் ஆகியோர் கூட்டாக இன்று காலை தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:–
மத்தியில் ஆளும் பா.ஜ,க. அரசு கொண்டுவந்துள்ள நிலம் கையகப்படுத்தும் மசோதா விவசாயிகளுக்கு நிலத்தின் மீதுள்ள உரிமையை பறிப்பதாக உள்ளது. வளர்ச்சி என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்கள் பெரும் முதலாளிகள், ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு சட்டம் எனும் ஆயுதத்தை பயன்படுத்தி விவசாயிகளிடம் இருந்து நிலத்தை பறித்து, தாரை வார்க்க இந்த சட்டம் பயன்படும்.

உணவு உற்பத்தியை பாதிக்கும், விவசாயிகளின் வாழ்வை சீர்குலைக் கும்மசோதாவிற்கு அனைத்து எதிர்கட்சிகளும், ஆளும் கூட்டணியில் உள்ள கட்சிகளும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருப்பதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்கிறது. அதேநேரத்தில் அ.தி.மு.க. இந்த மசோதாவிற்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் வாக்களித்திருப்பது விவசாயிகளுக்கு செய்துள்ள மாபெரும் துரோகமாகும். இந்த சட்டம் தொடர்பாக அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா அளித்த விளக்கங்கள் தவறானதாகும் எனவே விவசாயிகளுக்கு விரோதமான இந்த நிலையை அ.தி.மு.க. தலைமை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இந்த மசோதாவில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள சில திருத்தங்கள் கண்துடைப்பானவை எனவே விவசாயிகளிடம் இருந்து நிலத்தை பறிக்கும் மசோதாவை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும்.
மத்திய அரசின் இந்த மசோதாவிற்கு எதிராக மக்கள் சக்தியை திரட்டுகின்ற முயற்சியை நாடு முழுவதும் பல்வேறு விவசாய சங்ககங்கள், சமூக நல அமைப்புகள் ஈடுபட்டுள்ளன.

அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் அனைத்து விவசாயிகள் சங்ககங்கள், விவசாய தொழிலாளர் சங்கங்கள், சமூக நல அமைப்புகளை ஒன்று திரட்டுகிற முயற்சி நடைபெறுகிறது. அதன் முதல் நடவடிக்கையாக கொள்கைக்காக உயிர் துறந்த மாவீரர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ், ஆகிய தியாகிகளின் நினைவுதினமான மார்ச் 23–ந் தேதி அன்று நில உரிமை தினமாக கடைபிடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி, புதுக்கோட்டை,அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்ட விவசாயிகளின் மாநாடு தஞ்சை திலகர்திடலில் வருகிற 23–ந் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது.

அந்த மாநாட்டில் “விவசாயிகளின் சம்மதம் இல்லாமல் நிலத்தை எடுக்க விடமாட்டோம்“ என்ற உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறும். நிலம் கையகப்படுத்துதல் மசோதாவை எதிர்க்க கூடிய அனைவரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று ஆதரவு நல்கிட வேண்டும்.

அன்றைய தினம் அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு எடுக்கப்படும். மத்திய அரசு நிலம் கையகப்படுத்தும் திருத்த மசோதாவை திரும்பபெறும் வரை விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக