புதன், மார்ச் 11, 2015

கேரளாவில் மாட்டுக்கறி உண்ணும் விழா: மகாராஷ்டிரா மாநிலத்தில் சமீபத்தில் மாட்டுக்கறி தடைக்கு எதிர்ப்பு

மகாராஷ்டிரா மாநிலத்தில் சமீபத்தில் மாட்டுக்கறி தடை செய்யப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பல போராட்டங்களையும், கடும் விமர்சனங்களையும் சந்தித்து வரும் நிலையில் கேரளாவில் இன்று பொது இடத்தில் மாட்டுக்கறி சமைத்து இந்து மற்றும் முஸ்லீம்கள் என்று அனைவருக்கும் வழங்கும் விழா நடைபெற்றது.

மகாராஷ்டிராவின் சிவ சேனா அரசு விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தத்தை கொண்டு வர எண்ணி 1995 ம் ஆண்டு ஒரு மசோதாவை தாக்கல் செய்திருந்ததது. 19 ஆண்டு காலம் நிலுவையில் இருந்து வந்த அந்த மசோதா கடந்த வாரம் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் அங்கீகாரத்தால் நிறைவேற்றப்பட்டது.  

இந்த சட்டப்படி மகாராஷ்டிர மாநிலத்தில் மாட்டுக் கறியை விற்றாலோ, அல்லது சாப்பிட்டாலோ அவர்களுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூபாய் 10,000 வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் இந்த சட்டம் பசுக்கள் மட்டுமின்றி காளை மாடுகள் கொல்லப்படுவதையும் தடை செய்கிறது. ஆயினும் எருமை மாடுகள் கொல்லப்படுவதை இந்த சட்டம் தடை செய்யவில்லை.

இந்நிலையில், நாடு முழுவதும் இதை எதிர்த்து பல வகைகளில் சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர். அந்த வகையில் இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான டைஃபி-யின் சார்பில் பொது இடத்தில் மாட்டுக்கறி சமைத்து அதை உண்ணும் போராட்டம் நடைபெற்றது. 

இதுகுறித்து போராட்டத்தலைவர் பிஜூ கூறுகையில் “மகாராஷ்டிராவில் மாட்டுக்கறி தடை செய்யப்பட்டதற்கு இது ஒரு அடையாள எதிர்ப்பு, மற்றும் கேரளாவில் இதை நடைமுறைப்படுத்த நினைப்பவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை. நாங்கள் சாப்பிடும் உணவை எவரும் தடை செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக