சனி, மார்ச் 07, 2015

நியூ யார்க்கில் கடுமையான பனிப்பொழிவு: ஓடுபாதையில் இருந்து விலகி பனிக்குவியலில் பாய்ந்து புதைந்த விமானம்

அமெரிக்காவின் டெக்சாஸ் நகரிலிருந்து நியூ இங்கிலாந்து வரையில் கடந்த பல மணி நேரமாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகின்றது. இதனையடுத்து, பல மாகாணங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அட்லாண்டா நகரில் இருந்து வடக்கு நியூ யார்க் நகரில் உள்ள ல குவார்டியா விமான நிலையத்துக்கு உள்ளூர் நேரப்படி இன்று காலை 11 மணியளவில் டெல்டா நிறுவனத்துக்கு சொந்தமான ‘எம்.டி.-88’ ரக விமானம் தரையிறங்க அனுமதி கேட்டு வானத்தில் வட்டமிட்டு சுற்றி வந்தது.
விமானம் இறங்குவதற்கு வசதியாக ஓடுபாதையை ஒட்டியிருந்த பகுதியில் உறைந்து கிடந்த பனியை நீக்கும் வேலையில் ஊழியர்கள் ஈடுபட்டனர். ஆனால், அந்த விமானம் தரையில் தாழ இறங்கி ஓடுபாதையை தொட்டவுடன் ‘சரக்’ என்று பனியில் வழுக்கிச்சென்று பாதையின் ஓரம் இருந்த பனிக்குவியலில் விமானத்தின் மூக்குப்பகுதி சொருகிக்கொண்டது.

நடந்த ஆபத்தை உணர்ந்ததும் விமானத்தினுள் இருந்த பயணிகள் அலற தொடங்கினர். இதற்குள் ஆம்புன்ஸ் வாகனத்துடன் விமானம் புதைந்த இடத்துக்கு மீட்புப்படையினர் வந்து சேர்ந்தனர். உள்ளே இருந்த 127 பயணிகளையும், 5 விமான ஊழியர்களையும் அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றினர்.

காயமடைந்த ஒரு பெண் உள்பட இருவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தையடுத்து ல குவார்டியா விமான நிலையம் இன்று மாலை 7 மணிவரை மூடப்பட்டிருக்கும் என நியூ யார்க் மற்றும் நியூ ஜெர்ஸி விமான நிலைய கட்டுப்பாட்டு குழுமம் அறிவித்துள்ளது.

கெண்ட்டக்கி நகரில் சாலைகளில் பனி குவிந்து கிடந்ததால் வாகன ஓட்டிகள் இரவு முழுவதும் தங்களது வாகனங்களுக்குள்ளேயே உறங்கி கழிக்க நேர்ந்தது. வாஷிங்டன் நகரில் அவசியப்பணிகள் அல்லாத அரசுப் பணியாளர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேற்கு வர்ஜினியா மாநிலத்தில் சுமார் 82 ஆயிரம் வணிக நிறுவனங்களும், வீடுகளும் இருளில் மூழ்கிக்கிடக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக