ஓஸ்லோ:நார்வேயில் 77 பேரை கொலைச் செய்த வலதுசாரி தீவிரவாதி ஆண்டேர்ஸ் பெஹ்ரிங் ப்ரெவிக் தான் செய்ததை ஒத்துக்கொண்டதுடன் அவர்களை கொன்றது தீவிரவாதம் அல்ல மாறாக அது நார்வேயை பன்முக கலாச்சாரத்திடமிருந்தும், இஸ்லாத்திலிருந்தும் காப்பதற்காக என்று கூறியுள்ளான். பன்முக கலாச்சாரத்தையும் முஸ்லிம்களையும் மிகத் தீவிரமாக வெறுக்கும் ப்ரெவிக், நார்வே மக்கள் சொந்த நாட்டிலேயே சிறுபான்மையினராக மாறும் அபாயம் நேர்ந்துவிடக்
கூடாது என்பதற்காகவே படுகொலைகளைச் செய்ததாக கூறியுள்ளான்.
தீவிர வலதுசாரியான ப்ரெவிக், கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒஸ்லோ நகரில் கார் வெடிகுண்டுத் தாக்குதல் மூலம் 8 பேரையும், ஒடோயா தீவில் துப்பாக்கிச் சூட்டின் மூலம் 69 பேரையும் படுகொலை செய்தான்.
நீதிமன்ற விசாரணையின் போது அவனது இணையதள விளையாட்டு குறித்தும் மற்றும் வெடிக்குண்டு தயாரிக்கும் திட்டம் குறித்தும் வினவிய போது சிரித்தான். மேலும் இஸ்லாத்திற்கு எதிரான தனது 12 நிமிட வீடியோவை ஒளிபரப்பிய போது கண்ணீர்விட்டு அழுதுள்ளான்.
முஸ்லிம்களால் நார்வேயின் கலாசாரத் தனித்துவம் பாதிக்கப்படுவதை அனுமதிக்கும் தேசத் துரோகிகளையே தான் கொலைச் செய்ததாக கூறும் ப்ரெவிக் தனது இத்தகைய குரூர செயலுக்கு வருத்தப்படாமல் அது மிக அவசியமான ஒன்று எனவும் கூறியுள்ளான்.
மேலும் அவன் விசாரணை நடத்தும் இந்நீதிமன்றம் கலாச்சாரப் பன்முகத்தை ஆதரிக்கும் சக்திகளின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குவதால், தன்னுடைய வழக்கை விசாரிக்க அது பொருத்தமுடைய அதிகார அமைப்பு இல்லை எனவும் ஓர் இராணுவ நீதிமன்றத்தில் தன்னுடைய வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளான்.
பின்னர் ப்ரெவிக்கிடம் அவன் குண்டுவெடிப்பு நடத்துவதற்கு முன்னர் செய்த குற்றங்கள் பற்றி விசாரிக்கப்பட்டது. ப்ரெவிக் தனது நிறுவனத்தின் மூலம் பட்டைய படிப்பிற்கான போலி சான்றிதழ் தயாரித்து பணம் சம்பாதித்து வந்தது பற்றியும் நைட்ஸ் டெம்ப்லர் என்னும் தீவிரவாத குழுவின் உறுப்பினராக செயல்பட்டது குறித்தும் கேட்கப்பட்டது. ப்ரெவிக் தனகென்று பிரத்யேகமாக நைட்ஸ் டெம்ப்லரின் சீருடையும் மற்றும் ஆயுதங்களையும் வாங்கியிருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ப்ரெவிக் ஒஸ்லோவில் இருந்து 90 மைல்களுக்கு அப்பால் தோட்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து உரம், டீசல் மற்றும் ரசாயன பொருட்களைக் கொண்டு வெடிகுண்டு தயாரித்தது குறித்தும் விசாரிக்கப்பட்டது.
மேலும் இவ்விசாரணையின் போது ஐரோப்பாவில் இஸ்லாம் வேகமாக பரவிவருவது குறித்து ப்ரெவிக் தயாரித்த 12 நிமிட வீடியோவும் நீதிமன்றத்தில் பார்க்கப்பட்டது.
10 வாரமாக நடைபெறும் நீதிமன்ற விசாரணை இதற்கென்று பிர்தயேகமாக தயாரிக்கப்பட்ட அறையில் நடத்தப்பட்டது. மேலும் விசாரணையில் சாட்சிகள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் ஆகியோர் தங்களின் சாட்சியங்களை பதிவு செய்தனர். அனைத்து விசாரணைகள் முடிவுற்ற பின்னர் 3 நீதிபதிகள் மற்றும் 2 நிபுணர்களைக் கொண்ட குழு ப்ரெவிக் சிறைக்கு அனுப்பப்பட வேண்டுமா அல்லது மனநோய் மருத்துவ மனைக்கு அனுப்பப்பட வேண்டுமா என்பது குறித்து அறிக்கை அளிப்பார்கள்.
மேலும் ப்ரெவிக் செய்த குற்றங்களுக்காக சிறை சென்றால் அவன் 21 வருடம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டி வரும். மேலும் அவனால் சமூகத்திற்கு ஆபத்து ஏற்படுமானால் பின்னர் இந்த சிறைத் தண்டனை காலவரையறை இன்றி நீட்டிக்கப்படும். மேலும் ப்ரெவிக் மனநோய்க்கு ஆளானவர் என்று கருதப்பட்டால் அவன் தனது வாழ்நாள் முழுவதும் மனநல காப்பகத்தில் கழிக்க நேரிடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக