புதன், ஏப்ரல் 18, 2012

காபூல் தாக்குதல்:நேட்டோவின் தோல்வி – கர்ஸாய் !

காபூல்:காபூலில் தாலிபான் போராளிகள் தாக்குதல் நடத்தியது நேட்டோ உளவுத்துறையின் தோல்வி என்று ஆப்கான் அதிபர் ஹமீத் கர்ஸாய் குற்றம் சாட்டியுள்ளார்.காபூலை அதிர வைத்த தாலிபான்களின் வசந்த கால தாக்குதலுக்கு பிறகு முதன் முதலாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் கர்ஸாய்.நேட்டோவின் உளவுத்துறைக்கு ஏற்பட்ட தோல்விதான் தாலிபான் போராளிகள் காபூலில் நுழைந்து தாக்குதல் நடத்த உதவியது என்று குற்றம் சாட்டிய கர்ஸாய், 18 மணிநேரம் நீண்ட போராட்டத்தின் இறுதியில் அனைத்து
போராளிகளையும் கொலைச் செய்த ஆப்கான் ராணுவத்தினருக்கு பாராட்டு தெரிவித்தார்.
நாட்டை பாதுகாக்க ஆப்கான் ராணுவத்தினரால் முடியும் என்பதன் உதாரணம்தான் ஞாயிற்றுக்கிழமை நடந்த எதிர் தாக்குதல் என்று கர்ஸாய் வர்ணித்தார்.
ஞாயிற்றுக்கிழமை துவங்கி நேற்று அதிகாலை வரை நீண்ட மோதல் ஆப்கான் ராணுவம் மற்றும் நேட்டோ படையினரின் கூட்டு முயற்சியின் இறுதியில் முடிவுக்கு வந்தது.
அண்மையில் அமெரிக்க ராணுவ வீரன் 16 ஆப்கானிஸ்தான் சிவிலியன்களை கூட்டுப் படுகொலைச் செய்த சூழலில் நேட்டோ மையங்களை ஏமாற்றிவிட்டு தாலிபான்கள், அதீத பாதுகாப்பு மிகுந்த பகுதிகளில் நுழைந்து   தாக்குதலை நடத்தியுள்ளனர்.
சிவிலியன்களை படுகொலைச் செய்த ஆக்கிரமிப்பு ராணுவத்திற்கு பதிலடி கொடுப்போம் என்று தாலிபான் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.
அதேவேளையில், தாக்குதலை நடத்தியது ஹக்கானி குழுவினர் என்று ஆப்கான் உள்துறை அமைச்சகம் கூறுகிறது. தாலிபான், அல்காயிதா, ஹக்கானி ஆகியோர் ஒருங்கிணைந்து தாக்குதலை நடத்தியது விசாரணையில் தெரியவந்ததாக ஆப்கான் உள்துறை அமைச்சகம் கூறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக