சனி, ஏப்ரல் 21, 2012

அக்னி’யின் பாயும் திறனை இந்தியா மறைத்துவிட்டது: சீனா குற்றசாட்டு !

 இந்தியா சமீபத்தில் ஏவியுள்ள அக்னி - 5 ஏவுகணை 8,000 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பாலும் பாய்ந்து சென்று இலக்குகளைத் தாக்கும் திறன் படைத்தது என்று சீன ராணுவ நிபுணர் தெரிவிக்கிறார்.உலக நாடுகளின் கவனம் ஒரேயடியாகத் தன் மீது திரும்பிவிடக்கூடாது என்பதற்காக இந்த ஏவுகணை 5,000 கி.மீ. தொலைவு வரை செல்லக்கூடியது என்று இந்தியா குறைத்துக் கூறியிருக்கிறது. இது அதற்கும் மேலும் பாய்ந்து செல்லும் திறன் படைத்தது. அது மட்டும் அல்ல, அணுகுண்டு போன்ற ஆயுதங்களையும் தாங்கிச் சுமந்து செல்லவல்லது. இந்தியாவின் ராணுவத் திறன் வெகுவாக அதிகரித்திருக்கிறது. முழுத் தகவலையும் கூறினால் பக்கத்து நாடுகள் தங்களுடைய பாதுகாப்பு குறித்து கலவரம் அடையக்கூடும் என்பதால் இந்தியா அடக்கி வாசிக்கிறது'' என்று சீன மக்கள் விடுதலைச் சேனையைச் சேர்ந்த நிபுணர் டூ வென்லாங், குளோபல் டைம்ஸ் என்ற செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவிக்கிறார்.

 இந்த ஏவுகணையின் திறனை இதற்கும் மேலும் அதிகப்படுத்தி இதை கண்டம் விட்டு கண்டம் பாயும் அதி நவீன ஏவுகணையாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 அணு ஆயுதப் பெருக்கத்திலிருந்து பாதுகாப்பு தேவை: இந்தியாவின் ஏவுகணைச் சோதனையைக் கண்டிக்க முடியாத சீனா அதனால், தான் கலக்கம் அடைந்திருப்பதை வேறுவழியில் வெளிப்படுத்தியுள்ளது. அணு ஆயுதங்கள் மேலும் பெருகாதவண்ணம் உலக நாடுகள் தங்களுக்குள் கூடிப்பேசி தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறது.

 உலக அளவில் அணு ஆயுத உற்பத்தி, அணு ஆயுதப் பெருக்கம், அணுகுண்டு சோதனை, அணுகுண்டுத் தொழில்நுட்பத்தைப் பகிர்ந்துகொள்வது, அணுகுண்டு தயாரிப்பதற்கான மூலப் பொருள்களைச் சேகரிப்பது, நவீன ஏவுகணைகளைச் சோதித்துப்பார்ப்பது, அவற்றைத் தயாரிப்பது, அவற்றை ராணுவப் பயன்பாட்டில் சேர்ப்பது ஆகியவற்றை உலக நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து தடுக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தரச் சீனப் பிரதிநிதி லீ பாவோ டாங், நியூயார்க் நகரில் கோரியிருக்கிறார்.

 இந்த விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் முக்கியப் பங்காற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார். இதை சீனத்தின் சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

 கடந்த வாரம் வட கொரியா ஏவுகணைச் சோதனை நடத்தியது. அது தோல்வியில் முடிந்தது. அப்போது சீனா இதுபோன்ற கோரிக்கை எதையும் எழுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மனிதகுலத்தை அழிக்கவல்ல பேரழிவு ஆயுதங்களைக் கட்டுப்படுத்துவதில் ஓரளவுக்கு வெற்றி கிட்டியிருந்தாலும் ஆயுதங்கள் தயாரிப்பும் பெருக்கமும் குறைந்தபாடில்லை என்று சீனா சார்பில் அவர் கூறியிருக்கிறார்.

 அணு ஆயுதப் பெருக்கத்துக்கு சீனாவும் ஒரு காரணம் என்பது உலகுக்கே தெரியும் என்றாலும் இந்தியாவின் ஏவுகணைச் சோதனையை அடுத்து சீனா இந்தக் கருத்துகளைக் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

 நாடுகள் அனைத்துமே அணு சக்தியை ஆக்கப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் இதில் இரட்டை வேடம் போடக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

 அணுஆயுத பாதுகாப்புக்காக அனைத்து நாடுகளுமே தங்களுடைய ஆராய்ச்சி, வளர்ச்சி தகவல்களையும் கையிருப்புகளையும் தெரிவித்து பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக