வியாழன், ஏப்ரல் 19, 2012

அக்னி-5 கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணை - இந்தியாவின் வெற்றிச்சாதனை !

கண்டம் விட்டு கண்டம் தாவும் அக்னி-V ஏவுகணைச் சோதனையை இன்று காலை வெற்றிகரமாக நடத்தி இராணுவ வல்லரசு பலத்தை இந்தியா கூட்டியுள்ளது.
பல கி.மீ தொலைவு சென்று தாக்குந் திறனுள்ள இந்த ஏவுகணையைப் பயன்படுத்தி இந்தியாவிலிருந்து  உலகின் பலபகுதிகளைத் தாக்க முடியும்.  குறிப்பாக, சீனா, கிழக்கு ஐரோப்பா, கிழக்கு ஆஃப்ரிக்கா, ஆஸ்திரேலியக் கண்டம் ஆகியவற்றை எளிதாகத் தாக்க முடியும். முன்னதாக, கடந்த ஆண்டு  நவம்பரில் 3 ஆயிரம் கி.மீ தூரம் சென்று தாக்கும் திறன் கொண்ட அக்னி 4 ஏவுகணையை இந்தியா சோதனை செய்திருந்தது நினைவிருக்கலாம் அக்னி-Vஏவுகணை இன்று காலை 8.07 மணிக்கு ஒடிசா கரையிலுள்ள வீலர்
தீவிலிருந்து செலுத்தப்பட்டது. 5000 கி.மீ. தொலைவு கொண்ட இலக்கை அது வெற்றிகரமாகச் சென்றடைந்தது. இந்த ஏவுகணையை வெற்றிகரமாகச் செலுத்தியதன் மூலம் இந்தியா ஏவுகணை தொழிற்நுட்பத்தில் ஏவுகணைகளை கட்டுமானஞ் செய்யவும், மேம்படுத்தவும், வடிவமைக்கவும், உற்பத்தி செய்திடவும் திறன் கொண்டது என்பதை உலகுக்கு உணர்த்துகிறது என்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மைய (DRDO)பொது இயக்குநர் வி.கே. சரஸ்வாத் கூறினார். அக்னி-V ஒரு டன் எடை கொண்ட அணுகுண்டுகளை சுமந்து சென்றுத் தாக்கும் வல்லமை கொண்டது.  இந்த ஏவுகணை இயக்கிய பின்னர் இதனை நிறுத்த முடியாது. துப்பாக்கிக் குண்டை விட வேகமாக செல்லும் திறன் கொண்ட இந்த ஏவுகணையை சாலைப்பகுதிகளிலிருந்து கூட ஏவ முடியும்

இத்தகைய ஏவுகணைகளை அமெரிக்கா,ரஷ்யா, பிரான்ஸ், சீனா ஆகிய  நாடுகள் மட்டுமே சோதனை  செய்துள்ள நிலையில் அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றியின் மூலம் இந்தியாவும் ஏவுகணைத் தொழில்நுட்பத்தில் முன்னேறிய நாடுகளின் பட்டியலில்  இடம் பிடிக்கிறது.  50 டன் எடையும், 17 மீட்டர் உயரமும் உள்ள அக்னி V ஏவுகணை, ஒலியை விட 24 மடங்கு வேகத்திலும், பயணிகள் விமானத்தை விட 30 மடங்கு வேகத்திலும் சென்று குறிப்பிட்ட இலக்கை தாக்கும் வல்லமை உடையது.

இந்த ஏவுகணையை அமைதித் திட்டங்களுக்காகப் பயன்படுத்தப் போவதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.  இந்நிலையில், "இந்தியா எங்களுக்கு எதிரி அல்ல" என்று சீனா அறிவித்துள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக