சனி, மே 19, 2012

மருத்தும் படிக்கும் மாணவர்களுக்கு இனி ஓர் ஆண்டு கட்டாய கிராமப்புற சேவை!

புதுடெல்லி:மருத்துவ படிப்பை(எம்.பி.பி.எஸ்) பயிலும் மாணவர்களுக்கு கிராமப்புறங்களில் ஓர் ஆண்டு சேவை கட்டாயமாக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் நேற்று(வெள்ளிக்கிழமை) இதுக்குறித்து அவர் கூறியது:
கிராமப்புறங்களில் மூன்று ஆண்டுகள் பணியாற்றுவோருக்கு மருத்துவ மேற்படிப்பில் (எம்.டி) சேர 50 சதவீத இடஒதுக்கீடும், ஓராண்டு பணியாற்றுவோருக்கு 10 மதிப்பெண்களும் பின்தங்கிய கிராமங்களில் பணியாற்றுவோருக்கு 30 மதிப்பெண்களும் வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. அதன் பின்னரும் கிராமப்புறங்களில் பணியாற்ற மருத்துவர்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் மருத்துவர்கள் கிராமப்புறங்களில் ஓராண்டு பணியாற்றுவதை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தியாவில் மருத்துவம் படித்து விட்டுப் பணியாற்றும் மருத்துவர்களின் பதிவு விவரங்கள் மத்திய அரசிடம் முழுமையாக இல்லை. அதனால், தொழில் தொடங்கும் மருத்துவர்கள் தங்களைப் பதிவு செய்து கொள்ளும் நடைமுறை ஒழுங்குபடுத்தப்படும்.
மருத்துவர் குறைந்தது மூன்று மாநிலங்களில் பதிவு செய்து விடுகிறார். சிலர் படித்த பின்பு வெளிநாட்டுக்கு இடம் பெயர்ந்து விடுகிறார்கள். இதனால், மருத்துவர்களின் எண்ணிக்கையைத் துல்லியமாகப் பதிவு செய்ய இயலவில்லை.
மருத்துவர்களின் பதிவை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு கிடைத்த தகவலின்படி, 2011-ம் ஆண்டு மார்ச் வரை 8,40,130 மருத்துவர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்துள்ளனர் என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக