புதுடெல்லி:ஹைடெக் யோகா குருவும், குறுகிய காலத்தில் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பணத்தை குவித்து விட்டு கறுப்புப் பணம் மற்றும் ஊழலுக்கு எதிராக போராட்டம் என்ற பெயரில் கேலிக்கூத்தை நடத்துபவருமான பாபா ராம்தேவின் அறக்கட்டளைகளுக்கு அளித்து வந்த வருமான வரி விலக்கை மத்திய அரசு ரத்துச்செய்துள்ளது. ஆயுர்வேத மருந்துகள் விற்பனையில் ரூ.58 கோடியை வரியாக செலுத்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ராம்தேவ் நடத்திவரும் பதஞ்சலி யோகபீடம், திவ்ய யோக மந்திர், பாரத சுவாபிமான் ஆகிய அறக்கட்டளைகளுக்கு வருமான வரித்துறை இந்த நோட்டீûஸ அனுப்பியுள்ளது. இந்த அறக்கட்டளைகள் ஆயுர்வேத மருந்துகளை தயாரித்து விற்று வருகின்றன.
இதன்மூலம் 2009-10 காலகட்டத்தில் ரூ.120 கோடி வருவாய் கிடைத்துள்ளது. எனவே இதை வர்த்தக நடவடிக்கையாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது. இந்த ஆயுர்வேத மருந்துகள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் விற்பனை செய்யப்படுகின்றன.
கடந்த சில ஆண்டுகளாக அவரது அறக்கட்டளைகள் வருமான வரியிலிருந்து விலக்கு பெற்று வந்தன. ராம்தேவ் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களிலும் வருமான வரித்துறையினர் சிறப்புத் தணிக்கையில் ஈடுபட்டனர். ராம்தேவின் அறக்கட்டளைகள் அன்னியச் செலாவணியில் முறைகேடுகள் செய்ததான புகார் குறித்து அமலாக்கத்துறையினர் விசாரித்து வருகின்றனர். வருமான வரித்துறையினரின் ஆய்வு அந்த விசாரணைக்கும் உதவிகரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
ராம்தேவின் அறக்கட்டளைகள் கணக்கு வைத்துள்ள வங்கிகளின் ஆவணங்களைப் பெற்று ஆய்வு செய்த பின்பு இந்த தணிக்கையை சோதனையை வருமான வரித்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
ரூ.7 கோடி முறைகேட்டில் ஈடுபட்டதாக அன்னியச் செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் ராம்தேவின் அறக்கட்டளைகள் மீது அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ராம்தேவ் தனது வர்த்தக நிறுவனங்களின் வருவாய் மதிப்பு ரூ.1,100 கோடிக்கும் மேல் என்று கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார்.
அவரது நான்கு அறக்கட்டளைகளிலும் ரூ.426.19 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும், எனினும் அவற்றின் செலவு ரூ.751.02 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக